ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்கும் முன்னதாக தேர்தல் எல்லைகளை நிர்ணயிக்கும் குழு இன்னும் அமைக்கப்படவில்லை என்று தேர்தல் துறை வியாழக்கிழமை (ஜனவரி 2) தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் தேர்தல் வரைபடத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், மாற்றங்களைச் செய்வதற்கும் ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்னதாகவே இந்தக் குழு அமைக்கப்படுகிறது. மக்கள்தொகை மாற்றங்கள், வீடுகளின் மேம்பாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு (Electoral Boundaries Review Committee ) (இபிஆர்சி) சரிசெய்யும்.
இந்த ஆண்டு நவம்பர் 23ஆம் தேதிக்குள் அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்ததிலிருந்து நாடு காணும் 14வது பொதுத் தேர்தல் இதுவாகும். மேலும், நான்காம் தலைமுறைத் தலைமைத்துவத்தின் தலைவராக பிரதமர் லாரன்ஸ் வோங் எதிர்கொள்ளும் முதலாவது தேர்தலாகும்.
“அவ்வாறு அமைக்கப்படும் இபிஆர்சி குழு தனது பணியை சில வாரங்களில் முடித்துவிடக்கூடும். அவ்வாறு இந்த ஆண்டும் நடக்கலாம். அதன் பிறகு பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம்,” என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறையின் இணைப் பேராசிரியர் சோங் ஜா லான்.
“பிரதமர் வோங் இபிஆர்சி குழு அமைக்கப்படுவதற்கு முன், பிப்ரவரியில் வரவுசெலவுத் திட்டம் (பட்ஜெட்) திறம்படச் செயலாக்கப்படுவதை உறுதிசெய்ய விரும்பலாம்,” என்று சிங்கப்பூர் அரசியல் நிலவரம் பற்றி எழுதியுள்ள தன்னிச்சையான அரசியல் கவனிப்பாளர் ஃபிலிக்ஸ் டான் தெரிவித்தார்.
“இபிஆர்சி குழு பிப்ரவரியில் அமைக்கப்பட்டால், அது தனது இறுதி அறிக்கையை வெளியிடுவதற்கு ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை ஆகலாம். அவ்வாறு நிகழ்ந்தால், மே அல்லது ஜூன் மாதத் தொடக்கத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம்,” என்று திரு டான் மேலும் கூறினார்.
“பொதுத் தேர்தல் அறிவிக்கப்படும் வரை, அரசியல் கட்சிகள் தங்கள் உத்தேசமான வேட்பாளர்களை அறிமுகப்படுத்த காத்திருக்கக்கூடாது. கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை முன்கூட்டியே அறிமுகப்படுத்துவதால், வாக்காளர்கள் அவர்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளது,” என்று டாக்டர் டான் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
திரு வோங்குக்கு முன்பு, அதாவது 2006, 2011, 2015, 2020ஆம் ஆண்டுகளில் இபிஆர்சி குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டதற்கும் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டதற்கும் இடையே இரண்டு முதல் 11 மாத இடைவெளி இருந்தது.
பிரதமரின் செயலாளர் தலைமையிலான தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழுவில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், சிங்கப்பூர் நில ஆணையம், புள்ளிவிவரத் துறை, தேர்தல் துறை ஆகியவற்றின் மூத்த அரசாங்க ஊழியர்கள் அங்கம் வகிப்பார்கள்.
இபிஆர்சி குழுவின் உருவாக்கம் சிங்கப்பூரின் அடுத்த பொதுத் தேர்தலுக்கான அடுத்த கட்டமாக இருக்கும்.
அடுத்த பொதுத் தேர்தலில் 2.7 மில்லியனுக்கும் அதிகமான சிங்கப்பூரர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கிறார்கள்.