சிங்கப்பூர் அடுத்த சில ஆண்டுகளில் புதுப்பிக்கப்படும் எரிசக்தி இறக்குமதியைத் தொடங்கும்போது, சராசரிப் பயனாளரின் மின்கட்டணம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்காது என்று கவனிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
கரிம வெளியேற்றத்தைக் குறைக்கத் திட்டமிடும் நிறுவனங்கள்தான் பெரும்பாலும் இவ்வாறு இறக்குமதி செய்யும் என்பதை அவர்கள் சுட்டினர்.
சூரிய சக்தித் தகடுகள், காற்றாலை போன்றவை மூலம் தயாரிக்கப்பட்ட மின்சாரம் இறக்குமதி செய்யப்படும்போது மின்கட்டணம் தற்போதைய கட்டணத்தைவிடக் கூடுதலாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தொடர்பில் தேவைப்படும் மின்கலன் சேமிப்புத் தீர்வுகள், மின்சாரத்தைக் கடத்த உதவும் கம்பிவடங்கள் போன்றவற்றுக்கான விலை அதிகம் என்பதால் கட்டணம் உயரக்கூடும் என்று கருதப்படுகிறது.
இம்மாதத் தொடக்கத்தில், சிங்கப்பூர், 2035ஆம் ஆண்டுக்கான அதன் மின்சார இறக்குமதி இலக்கை 4 கிகாவாட்டிலிருந்து (GigaWatt) 6 கிகாவாட்டுக்கு உயர்த்தியது.
இந்தோனீசியாவிலிருந்து ஏறக்குறைய 3.4 கிகாவாட் மின்சாரத்தை இங்குள்ள ஏழு நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் என்றும் அவற்றில் ஐந்து நிறுவனங்கள் 2028ஆம் ஆண்டு முதல் அவற்றின் வர்த்தகத் திட்டங்களைத் தொடங்கும் என்றும் கூறப்பட்டது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த எரிசக்திச் சந்தை ஆணையம், இத்தகைய குறைந்த கரிம மின்சாரத்திற்கான கட்டணம் இதர இடங்களிலிருந்து பெறப்படும் குறைந்த கரிம மின்சாரத்தைவிட விலை அதிகமானதாக இருக்காது என்று கூறியது.
இந்தோனீசியாவிலிருந்து இறக்குமதி செய்ய நிபந்தனையுடன் கூடிய அனுமதி பெற்றுள்ள ‘வீணா எனர்ஜி’ நிறுவனப் பேச்சாளர், மின்கட்டணத்தைப் போட்டித்தன்மையுடன் வைத்திருக்க நிறுவனம் கடப்பாடு கொண்டுள்ளதாகக் கூறினார்.
‘பசிபிக் மெட்கோ சோலார் எனர்ஜி’ நிறுவனப் பேச்சாளர், இந்தோனீசியாவிலிருந்து தருவிக்கப்படும் மின்சாரத்தின் கட்டணம் போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
நீடித்த நிலைத்தன்மை இலக்குகளைக் கொண்டுள்ள நிறுவனங்கள்தான் புதுப்பிக்கப்படும் எரிசக்தியை இறக்குமதி செய்யவிருப்பதால் சிங்கப்பூரில் சராசரிப் பயனாளர் கட்டண உயர்வால் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்றது ‘வுட் மெக்கென்ஸி’ நிறுவனம்.
எரிசக்திச் சந்தை ஆணையம் புதிதாகத் தொடங்கியுள்ள வருங்கால எரிசக்தி நிதி, இத்தகைய இறக்குமதித் திட்டங்களுக்கான செலவைக் குறைக்கக் கைகொடுக்கக்கூடும் என்பதை அது சுட்டியது.

