அங்கீகரிக்கப்படாத முகவரி மாற்றங்களைத் தடுக்கும் நோக்கில் இணையம் வழியாக வீட்டு முகவரியை மாற்றும் சேவையை சனிக்கிழமை (ஜனவரி 11) காலை முதல் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம்.
இச்சேவை ஜனவரி 14ஆம் தேதி மீண்டும் தொடங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த இணையம்வழி முகவரி மாற்றச் சேவையைப் பயன்படுத்தி 80 அங்கீகரிக்கப்படாத முகவரி மாற்ற முயற்சிகள் நடந்துள்ளதையும் அதில் 75 விழுக்காடு வெற்றியடைந்ததையும் ஆணையம் அடையாளம் கண்டது.
தேசியப் பதிவுச் சட்டத்தின்கீழ் அடையாள அட்டை முகவரி மாற்றத்தை 28 நாள்களுக்குள் தெரியப்படுத்த வேண்டியது அவசியம்.
இதனை எளிதாக்க உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், தங்கள் சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்தி மின்னணு முறையில் முகவரி மாற்றம் செய்யும் சேவை அறிமுகம் கண்டது.
2020ல் தொடங்கப்பட்ட இச்சேவையில் சுய, குடும்பத்தினர் முகவரி தவிர, மின்னிலக்கப் பயன்பாடு செய்ய இயலாதோருக்கு உதவும் வண்ணம் பிறருக்கு முகவரி மாற்றம் செய்யும் சேவையும் உள்ளது. மாதந்தோறும் ஏறத்தாழ 900 முகவரிகள் இச்சேவையைப் பயன்படுத்தி மாற்றப்படுகின்றன.
இந்தச் சேவையைப் பயன்படுத்தி, மோசடிப் பேர்வழிகள் திருடப்பட்ட சிங்பாஸ் கணக்கின் உதவியுடன் பிறரது முகவரிகளை மாற்றம் செய்வது, பொதுமக்களிடமிருந்து வந்த புகார்கள் மூலம் கண்டறியப்பட்டது.
முகவரி மாற்றப்பட்டால், அதன் மூலம் சிங்பாஸ் கணக்கின் மறைச்சொல்லை மாற்ற முடிகிறது. அதனால் மேலும் நடக்க வாய்ப்புள்ள மோசடிகளைத் தடுக்கவும் இந்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இரண்டு நாள் மறுஆய்வுக்குப் பின் மீண்டும் இச்சேவை தொடங்கவுள்ள நிலையில், பிறருக்கு முகவரி மாற்றம் செய்யும் சேவை மட்டும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை நிறுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதுவரை முகவரி மாற்றம் சேவைக்கு பொதுமக்கள் ஆணையத்தை நேரடியாக அணுகலாம்.
இவ்வகை மோசடிகளைத் தடுக்க, மாற்றம் செய்வோரின் கணக்கிற்கு முக அடையாளச் சோதனை முறை, ஒருமுறை பயன்படுத்தப்படும் மறைச்சொல் உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுவரப்படும் என்றும் ஆணையம் தெரிவித்தது.
பாதிக்கப்பட்டோரைத் தொடர்புகொண்டு, அவர்களுக்கு அதே அடையாள எண்ணுடன் புதிய தேதியிட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், திருடப்பட்ட சிங்பாஸ் கணக்குகளை மீட்க ‘கவ்டெக்’ அமைப்புடன் இணைந்து பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையர் மெர்வின் சிம் தெரிவித்தார்.
திருடப்பட்ட கணக்குகள் குறித்தும் அங்கீகரிக்கப்படாத முகவரி மாற்றங்கள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
தங்கள் அடையாள அட்டை முகவரியைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அங்கீகரிக்கப்படாமல் முகவரி மாற்றப்பட்டிருந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.