தைப்பூசம் 2026: தெண்டாயுதபாணி உற்சவரின் வெள்ளித்தேர் உலா

தைப்பூசம் 2026: தெண்டாயுதபாணி உற்சவரின் வெள்ளித்தேர் உலா

1 mins read
c35ba45e-3ce8-46bb-afbb-6d0171a48957
சனிக்கிழமை (ஜனவரி 31) அதிகாலை,பக்தர்கள் புடைசூழ அருள்மிகு தெண்டாயுதபாணி உற்சவரைச் சுமந்த வெள்ளித்தேர் சாலையில் சென்றது. - படம்: த.கவி

தைப்பூசத்தை முன்னிட்டு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் வெள்ளித்தேர், சனிக்கிழமை (ஜனவரி 31) அதிகாலை, சாலைகளில் உலா வந்தது.

தேங் ரோடு கோயிலின் முகப்பில் பக்தர்கள் ஏறத்தாழ 300 பேர் திரண்டிருந்த நிலையில், முருகப்பெருமானின் உற்சவத் திருவுருவத்திற்கு வழிபாடு செய்யப்பட்டு, பின்னர் மின்னும் வெள்ளித்தேரில் ஏற்றப்பட்டது.

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் வாசலில் வெள்ளித்தேர், ஆலய உற்சவர்.
அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் வாசலில் வெள்ளித்தேர், ஆலய உற்சவர். - படம்: த.கவி

மேள தாளம் முழங்க, தூப தீப மரியாதை செய்யப்பட்ட பிறகு, ஒளிரும் வெள்ளித்தேர் மெல்ல நகர்ந்தது. கிட்டத்தட்ட மூன்று இடங்களில் பக்தர்கள் சீர்த்தட்டுகளைப் படைத்துத் தெண்டாயுதபாணியின் திருவுருவத் தரிசனம் பெற்றனர்.

பின்னர், இந்தத் தேர் சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயில் வாசலில் சிறிது நேரம் நின்றது. அங்கும் தெண்டாயுதபாணி உற்சவருக்குத் தீபாராதனையுடன் மரியாதை செய்யப்பட்டது.

அருள்மிகு தெண்டாயுதபாணி மூலவருக்குத் தீபாராதனை. 
அருள்மிகு தெண்டாயுதபாணி மூலவருக்குத் தீபாராதனை.  - படம்: த.கவி
பக்தர்கள் அருள்மிகு தெண்டாயுதபாணி உற்சவரைச் சுமந்து தேருக்குக் கொண்டுசெல்கின்றனர். 
பக்தர்கள் அருள்மிகு தெண்டாயுதபாணி உற்சவரைச் சுமந்து தேருக்குக் கொண்டுசெல்கின்றனர்.  - படம்: த.கவி

தாயிடம் விடைபெற்ற முருகப்பெருமான், அண்ணன் கணபதி வீற்றிருக்கும் லயன் சித்தி விநாயகர் ஆலயத்தை அடையும் நேரத்தில் பொழுது புலர்ந்தது. இன்று (ஜனவரி 31) மாலை வரை அங்குத் தங்கும் உற்சவர், வேலாயுதத்துடன் அங்கிருந்து மீண்டும் தேங் ரோடு கோயிலுக்கு வெள்ளித் தேரில் திரும்புவார்.

மாலைகளும் ஆபரணங்களும் சாற்றப்பட்ட உற்சவர், வெள்ளித் தேரின்மீது அமர்கிறார்.
மாலைகளும் ஆபரணங்களும் சாற்றப்பட்ட உற்சவர், வெள்ளித் தேரின்மீது அமர்கிறார். - படம்: த.கவி

சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கும் தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலுக்கும் இடைப்பட்ட 3.2 கிலோமீட்டர் தொலைவு ஊர்வலப் பாதையில், பக்தர்கள் இன்றிரவிலிருந்து பால்குடம் ஏந்திச் செல்லத் தொடங்குவர் எனக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்