அதிபர் வேட்பாளர் டான் கின் லியானுக்கு வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழ் அவரின் சமூக ஊடகப் பதிவுகளுக்கான ஒப்புதலன்று என்று அதிபர் தேர்தல் குழு தெரிவித்தது.
தகுதிச் சான்றிதழைக் கொடுப்பதற்கு முன்னரோ மறுப்பதற்கு முன்னரோ ஒவ்வொரு விண்ணப்பதாரரின் கடந்தகால சமூக ஊடகப் பதிவுகளைப் பார்ப்பதில்லை என்று குழு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
கடந்த வார இறுதியில் அவரது பதிவுகளைக்கொண்டு தொகுக்கப்பட்ட டிக்டாக் காணொளி ஒன்று இணையத்தில் வலம்வந்ததைத் தொடர்ந்து திரு டானின் சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பான விவகாரம் திங்கட்கிழமையன்று வெளிவந்தது.
திங்கட்கிழமை மாலை நிலவரப்படி, அந்தக் காணொளி 225,000 முறை பார்க்கப்பட்டது.
‘என்டியுசி இன்கம்’ நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான அவர், பெண்களின் தோற்றம் குறித்து அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 2022ஆம் ஆண்டிலிருந்து அத்தகைய 18 பதிவுகள் இருந்ததாகவும் இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து ஐந்து பதிவுகள் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
திரு டானுக்குத் தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டதற்கு முன்னர், அவரது சமூக ஊடகப் பதிவுகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்று குழு கூறியது. அதனால் தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது, திரு டானின் சமூக ஊடகப் பதிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதாக எடுத்துக்கொள்ளப்படக்கூடாது என்றது குழு.
இந்நிலையில், கடந்த சில நாள்களாகத் தமது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் திரு டான் கூறியிருக்கிறார்.
“என்னைத் தாக்குவதற்கு குழு ஒன்று அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது இப்போது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது,” என்று அவர் ஊடக அறிக்கை ஒன்றில் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
எவரது பெயரையும் சான்றையும் குறிப்பிடாமல், தம்முடைய ‘முன்னணி எதிராளி’ முதன்மை ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்களுடனும், பெண்கள் உரிமை அமைப்பு ஒன்றுடனும் இணைந்து செயல்பட்டு வருவதாகத் திரு டான் குறிப்பிட்டார்.

