தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விலைவாசி உயர்வைச் சமாளிக்க செப்டம்பரில் சிறப்புத் தொகை வழங்கீடு

2 mins read
878edf7c-dad4-483e-95af-1408b3a80444
2022 ஜூன் 20ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் முஸ்தஃபா சென்டரில் வாடிக்கையாளர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

விலைவாசி உயர்வைச் சமாளிக்க ஏதுவாக ஏறத்தாழ 2.4 மில்லியனுக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் $200 முதல் $400 வரை ரொக்கம் வழங்கப்பட உள்ளது.

ஒருமுறை மட்டும் வழங்கப்படக்கூடிய இந்தத் தொகை, $100,000 வரை வரி மதிப்பீட்டுக்குரிய ஆண்டு வருமானம் உடைய 21 வயது நிரம்பிய சிங்கப்பூரர்களுக்குப் பொருந்தும் என்று நிதி அமைச்சு ஆகஸ்ட் 13ஆம் தேதி தெரிவித்துள்ளது.

வரி மதிப்பீட்டுக்குரிய வருமானத்தைப் பொறுத்து ரொக்கத் தொகை வழங்கீடு நிர்ணயிக்கப்படும்.
வரி மதிப்பீட்டுக்குரிய வருமானத்தைப் பொறுத்து ரொக்கத் தொகை வழங்கீடு நிர்ணயிக்கப்படும். - படம்: நிதி அமைச்சு

ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துகளை வைத்திருப்போருக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரொக்க வழங்கீட்டுக்கான தகுதியை ‘govbenefits’ இணையத்தளத்தில் சிங்பாஸ் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். தகுதியான நபர்களுக்கு ரொக்கம் செலுத்தப்பட்ட பிறகு ‘சிங்பாஸ்’ செயலி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

மேலும், மோசடிகளைத் தடுக்கும் விதமாக, ரொக்கம் செலுத்தப்பட்டது குறித்து வாட்ஸ்அப் மூலமோ குறுந்தகவல்கள் வாயிலாகவோ அனுப்பப்பட மாட்டாது என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

வாழ்க்கைச் செலவினங்களுக்கான சிறப்பு வழங்கீடு கடந்த பிப்ரவரி மாதம் வரவுசெலவுத் திட்டத்தின்போது அறிவிக்கப்பட்டிருந்தது. பணவீக்கம் மற்றும் பொருள் சேவை வரி அதிகரிப்பின் தாக்கத்தைக் குறைக்கும் உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தின் (Assurance Package) ஒரு பகுதியாக இந்த வழங்குதொகை வழங்கப்படுகிறது.

தகுதிபெறும் சிங்கப்பூரர்களுக்கு இச்சிறப்புத் தொகை, அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கப்பட்ட பேநவ் வங்கிக் கணக்கு மூலமாகவோ, ஜைரோ கணக்கு மூலமாகவோ வழங்கப்படும்.

பேங்க் ஆஃப் சீனா, சிஐஎம்பி, சிட்டி பேங்க், டிபிஎஸ்/பிஓஎஸ்பி, எச்எஸ்பிசி, ஐசிபிசி, மேபேங்க், ஓசிபிசி வங்கி, ஆர்எச்பி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், டிரஸ்ட், யுஓபி உள்ளிட்ட 12 வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு முன்பாக தங்கள் அடையாள அட்டை எண்ணை ‘பேநவ்’ உடன் இணைக்கும்படி நிதி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்வாறு இணைக்கப்பட்ட கணக்குகளில் இந்தச் சிறப்புத் தொகை செப்டம்பர் 5ஆம் தேதி போடப்படும்.

அடையாள அட்டை எண் இணைக்கப்பட்ட ‘பேநவ்’ கணக்குகள் இல்லாமல், டிபிஎஸ்/பிஓஎஸ்பி, ஓசிபிசி அல்லது யுஓபி வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள் வங்கிக் கணக்குத் தகவல்களை ‘govbenefits’ இணையத்தளத்தில் வழங்கலாம்.

இச்சிறப்புத் தொகை பயனாளிகளுள் ஒருவர் திரு குமரன், 76. ஜூரோங் வெஸ்ட்டில் வசிக்கும் அவர், தனக்கும் தம் மனைவிக்கும் வழங்கப்படும் இத்தொகை பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகிறார்.

பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு, மூத்தோரைச் சந்திப்பதாகச் சொல்லும் இவர், “முன்னோடித் தலைமுறையைச் சேர்ந்த யாவருக்கும் இந்தத் தொகை அவசர, சொந்தத் தேவைகளுக்கு உதவியாக இருக்கும்.

“அவசரத் தேவை ஏற்படும்போது நண்பர்களிடம் கடன் வாங்கிச் செலவழிக்கும் சிலரை நான் பார்த்துள்ளேன். இதுபோன்ற சிறப்புத் தொகை வங்கிக் கணக்கில் இருப்பது கடன் வாங்கும் சூழ்நிலையைத் தவிர்க்க உதவுவதுடன், பாதுகாப்பான மனநிலையையும் மூத்தோர்க்கு வழங்குகிறது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்