சிங்கப்பூரில் புற்றுநோயைத் தவிர்க்க வலுவான கொள்கைகள் நடப்பில் உள்ளன. இருப்பினும், தீய பழக்கவழக்கங்களால் நோய் ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கக்கூடும் என்று புற்றுநோய் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையைக் குறைக்க பரிசோதனைத் திட்டங்கள் போன்றவற்றை அறிமுகம் செய்யும் அணுகுமுறை அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
உலக அளவில், பத்தில் நால்வர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்குப் புகைப்பிடித்தல், மது அருந்துதல், காற்றுத் தூய்மைகேடு ஆகியவையே காரணம் என உலகச் சுகாதார நிறுவனம் பிப்ரவரியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
நேச்சர் மெடிசன் (Nature Medicine) என்ற ஆய்வுக் கட்டுரையில் புகையிலைமீது இன்னும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது, தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதை வலியுறுத்துவது போன்ற பல்வேறு வழிமுறைகள் முன்வைக்கப்பட்டன.
அத்தகைய நடைமுறைகள் சிங்கப்பூருக்குப் பொருத்தமானதாக இருந்தாலும் உலக நாடுகளுடன் ஒப்புநோக்க வாழ்க்கைமுறை இங்குச் சற்று மாறுபட்டுள்ளதாகச் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழக புற்றுநோய் கழக மருத்துவர் குளோரியா சான் தெரிவித்தார்.
“சிங்கப்பூர் அதிக வருமானம் ஈட்டும் மூப்படையும் சமூகத்தைக் கொண்டது. எனவே, புற்றுநோயைப் பொருத்தவரை வாழ்க்கைமுறை இங்கு கூடுதல் பங்கு வகிக்கிறது,” என்றார் அவர்.
சிங்கப்பூரில் ஆரோக்கியமான வாழ்க்கைப் பகுதியில் 32.8 விழுக்காட்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் இழந்துள்ளதாக 2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அனைத்துலக நோய் சுமை அறிக்கை குறிப்பிட்டது.
புகையிலைப் பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் ஆகியவை புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான அதிக அபாயமுள்ள காரணங்களாக உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
எனினும் சிங்கப்பூரின் கொள்கைகள் சில வகை புற்றுநோய்களைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவியிருப்பதை டாக்டர் சான் சுட்டினார்.
1980களில் அறிமுகம் செய்யப்பட்ட ஹெபடைடிஸ் பி தடுப்பூசி மூலம் இளம் தலைமுறையினரிடம் அந்த நோய் வராமல் தடுக்க முடிந்தது என்ற டாக்டர் சான், அதன் மூலம் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க முடிந்தது என்றார்.
புகையிலைக்கு அண்மையில் அரசாங்கம் அறிவித்த 20 விழுக்காட்டு வரி உயர்வும் புற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் என்றார் அவர்.

