எதிர்வரும் மோதல்களுக்குச் சிங்கப்பூர் தயாராக வேண்டும்: டான் சீ லெங்

எதிர்வரும் மோதல்களுக்குச் சிங்கப்பூர் தயாராக வேண்டும்: டான் சீ லெங்

1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம் சாவ்பாவ்

20 Mar 2026 - 7:16 pm

2 mins read

மத்திய கிழக்கில் மோதல் மோசமடைந்துள்ளது என்றும் நிலைமை நிச்சயமற்றதாக உள்ளது என்றும் தெரிவித்தார் மனிதவள அமைச்சரும் எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டான் சீ லெங்.

இதற்கிடையே, வரவிருக்கும் மேலும் பல பூசல்களுக்குச் சிங்கப்பூர் தயாராக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“எண்ணெய், எரிவாயு விநியோகம் தவிர உரம் போன்ற பிற முக்கிய வளங்களும் பாதிக்கப்படக்கூடும். இது உலகப் பொருளாதாரத்தில் தொடர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்,” என்று டாக்டர் டான் எச்சரித்தார்.

சிங்கப்பூர் ‘எல்என்ஜி’ நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 20) வருகையளித்தபோது திரு டான் செய்தியாளர்களிடம் பேசினார்.

சிங்கப்பூரின் முதல், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) முனையத்தை இயக்கி வரும் ‘எல்என்ஜி’ நிறுவனம் தற்போது சிங்கப்பூரின் மின்சாரத் தேவைக்கான கிட்டத்தட்ட 50 விழுக்காட்டு இயற்கை எரிவாயுவை வழங்குகிறது.

தேவைப்பட்டால், உலகம் முழுவதிலுமிருந்து திரவ இயற்கை எரிவாயுவைக் கொண்டுவர இயலும் என்று உறுதியளித்தார் டாக்டர் டான்.

வரவுசெலவுத் திட்டம் 2026ல் அறிவிக்கப்பட்டதற்கு அப்பால், கூடுதல் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த சிங்கப்பூர் அரசாங்கம் தயாராக இருப்பதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் வியாழக்கிழமை (மார்ச் 19) அறிவித்தார்.

“நிலைமை இன்னும் மோசமடையும்போது பயன்படுத்துவதற்காக சில ஆதாரங்களைச் சேமித்து வைப்பது அவசியம்,” என்று பிரதமர் சொன்னதைச் சுட்டிக்காட்டினார் டாக்டர் டான்.

பொதுப் போக்குவரத்தை அதிகமாகப் பயன்படுத்துதல், குளிர் சாதனங்களுக்குப் பதிலாக மின்விசிறியை இயக்குதல், சூரிய மின்தகடுகளை நிறுவுதல், மின்சார வாகனங்களுக்கு மாறுதல் ஆகியவை எரிசக்தியைச் சேமிக்கக்கூடிய சில வழிகள் என்று அவர் எடுத்துக்கூறினார்.

“இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புவோம். அதேநேரத்தில், நீண்டகாலப் போராட்டத்திற்கு நம்மை மனத்தளவில் தயார்ப்படுத்திக் கொள்வோம்,” என்றார் டாக்டர் டான்.

குறிப்புச் சொற்கள்
மத்திய கிழக்குஇயற்கை எரிவாயுடாக்டர் டான்வரவுசெலவுத் திட்டம் 2026சிங்கப்பூர்