21 வயதிற்கு உட்பட்ட மோசடிக் குற்றவாளிகளுக்கும் சிறை, சீர்திருத்தப் பயிற்சிகள் தண்டனையாகப் பரிந்துரை

21 வயதிற்கு உட்பட்ட மோசடிக் குற்றவாளிகளுக்கும் சிறை, சீர்திருத்தப் பயிற்சிகள் தண்டனையாகப் பரிந்துரை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

03 Nov 2026 - 3:59 pm

2 mins read

சிங்கப்பூரில் அதிகரித்துவரும் மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கையைக் கையாளப் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மோசடிக் குற்றங்களுக்கான தண்டனையை நீதிமன்றம் பரிசீலிக்கும்போது குற்றவாளிகளுக்குச் சீர்திருத்தப் பயிற்சி அல்லது சிறைத்தண்டனை முதன்மைத் தண்டனைகளாகக் கருதப்பட வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இளங்குற்றவாளிகளுக்கான நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் சிறாரைத் தவிர்த்து மற்ற அனைத்துக் குற்றவாளிகளுக்கும் (21 வயதுக்குட்பட்டோராக இருந்தாலும்கூட) இப்பரிந்துரை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்வாண்டு செப்டம்பர் 10ஆம் தேதி முகம்மது எர்சான் வழக்கின் தொடர்பில் தீர்ப்பு விதிக்கப்பட்டது. அதில் மோசடிகளுக்குத் துணைபுரியும் குற்றங்களைச் செய்யும் இளங்குற்றவாளிகளுக்குச் சீர்திருத்தப் பயிற்சி அல்லது சிறைத்தண்டனை இயல்பான தண்டனையாக இருக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

அதற்கு மாறாக, மோசடி அல்லது மோசடி சார்ந்த குற்றம்புரியும் 21 வயதுக்கு உட்பட்டோர் விதிவிலக்கான சூழ்நிலைகளைக் கொண்டிருந்தாலன்றி, அவர்களுக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு அல்லது பிற மறுவாழ்வுத் தெரிவுகள் முதன்மைத் தண்டனையாகக் கருத்தப்படக் கூடாது என்று புதிய மசோதா வலியுறுத்திகிறது.

மோசடிகள், தீவிரத் தாக்கத்தை ஏற்படுத்துவதால் அவைத் தடுக்கப்பட வேண்டும் என்பதே மன்றத்தின் முக்கிய நோக்கம் என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.

அதைச் செயல்படுத்தும் வகையில் மோசடிகள், மோசடிகள் சார்ந்த குற்றங்களுக்கான தெளிவான தண்டனை வழிகாட்டுதல்களை வகுக்க அமைச்சு பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய தண்டனைகுறித்த ஆலோசனைக் குழுவுடன் இணைந்து பணியாற்றியது.

மோசடிகளை ஒடுக்குவதில் மக்களுக்குள்ள ஈடுபாட்டையும் அவற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் அவசியத்தையும் கருத்தில் கொண்டு ஆலோசனைக் குழுவால் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பரவலாகக் காணப்படும் மோசடிகள் தொடர்ந்து நீடிக்கின்றன. 2026ன் முதல் பாதியில், ஒவ்வொரு நாளும் காவல்துறை ஏறக்குறைய 90 மோசடிப் புகார்களைப் பெற்றதாகவும் அன்றாடம் ஏறத்தாழ $2 மில்லியன் பறிபோனதாகவும் அமைச்சு கூறியது.

தடுப்பு அணுகுமுறையைக் கையாளாவிட்டால் சிங்கப்பூரின் மோசடி நிலவரமும் இளையர் குற்றச்செயல்களும் மேலும் மோசமடையக்கூடும் என்று அது கருதுகிறது.

ஏமாற்றுதலையும் அது தொடர்பான குற்றங்களையும் செய்த இளையரின் எண்ணிக்கை 2024ல் 814ஆக இருந்தது. 2025ல் அது 37 விழுக்காடு அதிகரித்து 1,114 ஆனது.

அத்தகைய குற்றங்களைப் புரிந்த இளையர், மோசடி வழக்குகளில் பெரும்பாலும் இடைத்தரகர்களாகவே ஈடுபட்டிருந்தனர். குறுகிய காலத்தில் விரைவாகப் பணம் ஈட்டலாம் என்ற ஆசையில் அவர்கள் இத்தகைய குற்றங்களைச் செய்வதைத் தடுக்கக் கூடுதல் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமென அமைச்சு குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்