வான்வழியில் உயிர்காக்கும் பொறுப்பு

வான்வழியில் உயிர்காக்கும் பொறுப்பு

1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

24 Oct 2026 - 6:13 pm

2 mins read

சிறுவயது முதலே வானில் பறக்க வேண்டும் என்ற கனவு கொண்டிருந்த 25 வயது முதலாம் சார்ஜன்ட் ஜோனத்தன் இயன் ஆரோக்கியநாதன் இப்போது ‘சிஎச்-47எஃப் சினூக்’ ஹெலிகாப்டரில் பயணியர் அல்லது சரக்குகளுக்கான ‘கேபின்’ (cabin) பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் இயக்கும் கொள்ளும் விமானப் பணியாளர் குழு வல்லுநராகப் (Air Crew Specialist) பொறுப்பு வகிக்கிறார். 

2023ல் தேசிய சேவையில் இணைந்த அவர், வான்வழியே சென்று உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியால் ஈர்க்கப்பட்டு முழுநேரப் பணியாளராகத் தம்மை இணைத்துக் கொண்டார். 

ஆஸ்திரேலியாவின் ஷோல்வாட்டர் பே பயிற்சி மையத்தில் (SWBTA) நடக்கும் ‘வாலபி’ பயிற்சியில் அவர் பங்கேற்பது இது மூன்றாவது முறையாகும்.

ஹெலிகாப்டரின் உட்பகுதியை நிர்வகிப்பது, தரைப்படையினரை விரைவாக ஏற்றி இறக்குவது, மருத்துவ அவசர வெளியேற்றப் பணிகளுக்குத் துணைபுரிவது, கனரக வாகனங்களைத் தொங்கவிட்டு எடுத்துச் செல்வது (underslung) ஆகியவை இவரது முதன்மைப் பணிகள். 

இந்த ஆண்டுப் பயிற்சியில் ராணுவத்தின் இலகுரகத் தாக்குதல் (ஸ்ட்ரைக்) வாகனங்களை இரவுநேரத்தில் ஹெலிகாப்டரில் நீண்ட தூரம் கொண்டு சேர்த்த அனுபவம் தமக்கு மறக்க முடியாத தருணம் என்று அவர் நினைவுகூர்கிறார்.

சிங்கப்பூரைவிட ஐந்து மடங்கு பெரிய ஷோல்வாட்டர் பேயில் நீண்ட தூரப் பயணப் பயிற்சிகளை மேற்கொள்வது பயனுள்ள அனுபவமாக இருந்தாலும், நீண்ட காலம் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்பது மனத்தளவில் சவாலாக உள்ளது என்றார் அவர். 

தொடர்ச்சியான பணி மாற்றங்களுக்கு இடையே கிடைக்கும் ஓய்வு நேரங்களில் சக குழுவினருடன் வெளியே சென்று  உறவாடுவதன் மூலம்,  உற்றாரைவிட்டுப் பிரிந்த சோகத்தையும் பணி அழுத்தத்தையும் கையாள முடிவதாக அவர் கூறுகிறார்.

“ஆகாயப் படையில் இணைவது என்ற எனது முடிவுக்குப் பெற்றோர் தொடக்கத்திலிருந்தே முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றனர். விமானத் துறையின் மீதான எனது ஆர்வத்தை அவர்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளனர்.

“எனது பயிற்சிகளுக்கும் வளர்ச்சிக்கும் அவர்கள் தொடர்ந்து வழங்கி வரும் இந்த ஆதரவு, குடும்பத்தை விட்டுப் பிரிந்த நிலையிலும் சீராகப் பணியாற்றுவதற்குப் பெரும் பலமாக இருக்கிறது,” என்கிறார் ஜோனத்தன்.

குறிப்புச் சொற்கள்