ஈசூனில் கேரள பாணியிலான புதிய இந்து ஆலயம் அமைகிறது

2006ஆம் ஆண்டிற்குப் பிறகு சிங்கப்பூரில் கட்டப்படவிருக்கும் முதல் இந்து ஆலயம்

ஈசூனில் கேரள பாணியிலான புதிய இந்து ஆலயம் அமைகிறது

4 mins read
a1a66d9a-b306-44d9-9c21-17c5cdd059ef
புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலில் சனிக்கிழமை (மார்ச் 28) செய்தியாளர்களிடம் புதிய கோயில் பற்றிய தகவலை அறிவித்தார் கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ். அவருடன் (இடமிருந்து) நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜாக்சன் லாம், உள்துறை அமைச்சர் கா. சண்முகம், புதிய ஆலயத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் ரவீந்திரன். - படம்: த. கவி

சிங்கப்பூரில் உள்ள இந்து சமூகத்தின் அதிகரித்துவரும் தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் ஈசூன் அவென்யூ 3ல் புதிய இந்து ஆலயம் கட்டப்படவுள்ளது.

அரசாங்கத்தால் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பகுதி, ஈசூன் இனோவா தொடக்கக் கல்லூரிக்கு மிக அருகில் குடியிருப்புக் கட்டடங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.

ஈசூனில் இவ்வாண்டு திருக்குட நன்னீராட்டு விழா காணவிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் புதிய கோயிலுக்கான நிலப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஈசூனில் இவ்வாண்டு திருக்குட நன்னீராட்டு விழா காணவிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் புதிய கோயிலுக்கான நிலப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. - படம்: த. கவி

புதிய ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் இவ்வாண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்து ஆலோசனை வாரியம், மற்றச் சமூகத் தரப்பினருடன் நடத்திய ஆலோசனைகளைத் தொடர்ந்து ஸ்ரீ குருவாயூரப்பன் ஐயப்பன் ஆலயம் என அதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

ஈசூனில் இவ்வாண்டு திருக்குட நன்னீராட்டு விழா காணவிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் புதிய கோயிலுக்கான நிலப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஈசூனில் இவ்வாண்டு திருக்குட நன்னீராட்டு விழா காணவிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் புதிய கோயிலுக்கான நிலப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஈசூனில் இவ்வாண்டு திருக்குட நன்னீராட்டு விழா காணவிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் புதிய கோயிலுக்கான நிலப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. - படம்: த. கவி

ஈசூனில் உள்ள மற்றோர் இந்துக் கோயில், புனிதமரம் பாலசுப்பிரமணியர் ஆலயமாகும்.

சிங்கப்பூரில் கடைசியாகக் கட்டப்பட்ட இந்துக் கோயில் 2006ஆம் ஆண்டில் செங்காங்கில் அமைக்கப்பட்ட அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயம்.

புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலில் சனிக்கிழமை (மார்ச் 28) செய்தியாளர்களிடம் இந்தத் திட்டங்களைத் தெரிவித்த கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், சிங்கப்பூரில் தற்போது குருவாயூரப்பன், ஐயப்பன் ஆகிய இரு தெய்வங்களுக்கும் தனித்துவமாக எந்த ஆலயமும் இல்லை என்று குறிப்பிட்டார்.

புதிய ஆலயத்தில் அந்த இரண்டு முக்கியத் தெய்வங்களுடன் மேலும் பல தெய்வங்களும் இடம்பெற்றிருப்பர்.

சிங்கப்பூரின் வடபகுதியில் இந்தியக் குடியிருப்பாளர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர் என்பதைச் சுட்டிய துணை அமைச்சர் தினேஷ், சமூகத்திற்குச் சேவையாற்ற புதிய ஆலயம் சரியான இடத்தில் அமைந்துள்ளது என்றார்.

குறிப்பாக, இந்தியாவின் கேரள மாநிலத்தில் சபரிமலைக்குப் பயணம் மேற்கொள்ளும் சிங்கப்பூர் பக்தர்கள் பலருக்கு ஆலயம் ஒரு தொடக்கப் புள்ளியாக அமையும்.

பக்தர்கள், குறிப்பாக முதியவர்கள், ஆன்மிகப் பயணம் தொடங்குவதைப் புதிய ஆலயம் மேலும் எளிதாக்கும் என்று திரு தினேஷ் குறிப்பிட்டார்.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயம், ஐயப்பன் வீற்றிருக்கும் புகழ்பெற்ற புனித யாத்திரைத் தலம்.

அந்த மாநிலத்தில் இருக்கும் மற்றொரு கோயிலான குருவாயூர் ஆலயம், பகவான் கிருஷ்ணருக்கானது.

இந்த ஆலயங்கள் மலையாளச் சமூகத்திற்கு மிகவும் முக்கியமானவையாகும். அவை கேரளாவில் அமைந்துள்ளதோடு நீண்டகாலச் சமய மரபுகள், குடும்ப நடைமுறைகளுடன் நெருங்கிய தொடர்புடையவை.

கேரளாவிலிருந்து, அதிலும் குறிப்பாக சபரிமலை ஆலயத்தைச் சேர்ந்த அர்ச்சகர்களை நியமிக்கப் புதிய ஆலயம் திட்டமிட்டுள்ளதாகத் திரு தினேஷ் தெரிவித்தார்.

புதிய ஆலயத்தின் வடிவமைப்பும் நுழைவாயிலும் வழக்கமான இந்து ஆலயங்களிலிருந்து வேறுபட்டிருக்கும். அவை சிங்கப்பூரின் ‘நல்லிணக்க வட்டங்கள்’ என்ற கருப்பொருளை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருக்கும்.

வழிபாட்டுத் தலங்கள், சமூக ஒற்றுமைக்குப் பங்களிப்பதோடு அனைத்து இன மக்களும் இந்து சமயத்தை நன்கு புரிந்துகொள்ளவும் சிங்கப்பூரின் பன்முகக் கலாசாரத்தின் வலிமையை மதித்துணரவும் அது வாய்ப்பு வழங்கும் என்று திரு தினேஷ் சுட்டினார்.

சிங்கப்பூரில் பெரும்பாலும் உயரமான கோபுரங்களைக் கொண்டுள்ள பல இந்து ஆலயங்களின் கட்டடக்கலை பாணியிலிருந்து புதிய ஆலயத்தின் வடிவமைப்பு மாறுபட்டிருக்கும்.

தனித்துவமான அழகியலைத் தக்கவைத்துக்கொள்வதோடு இயற்கையான காற்றோட்டத்திற்கு வழிவகுக்கும் பாரம்பரியக் கேரள முகப்பு வடிவமைப்பை அது கொண்டிருக்கும்.

கலாசார, கல்வி, சமூக நிகழ்ச்சிகளை நடத்துவதற்காகப் புதிய ஆலயத்தில் பன்னோக்கு மண்டபமும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களைக் கொண்ட துணைக் கட்டடமும் அமையவுள்ளன.

இந்த வசதிகள் சமய நல்லிணக்கம், உணவு விநியோகம் போன்ற சமூக மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும்.

திரு தினேஷுடன் உள்துறை அமைச்சரும் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு கா. சண்முகம், நாடாளுமன்ற உறுப்பினர் ஜாக்சன் லாம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய ஆலயத்தின் அறங்காவலர் குழுவின் தலைவருமான திரு ரவீந்திரன் ஆகியோர் இருந்தனர்.

குருவாயூரப்பனுக்கும் ஐயப்பனுக்கும் அர்ப்பணிக்கப்படும் இந்தப் புதிய ஆலயம், சிங்கப்பூரில் உள்ள மலையாளச் சமூகத்தினரின் நீண்டகால விருப்பம் என்று தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சண்முகம் சொன்னார். புதிய ஆலயம் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“மலையாளச் சமூகத்திற்கு அப்பால் தமிழர்கள், வட இந்தியர்கள் உள்ளிட்ட பிற இந்துக்களும் ஐயப்பன், குருவாயூரப்பனின் தீவிர பக்தர்களாக உள்ளனர். இந்தியாவில் உள்ள இவ்விரு ஆலயங்களுக்கும் ஏராளமானோர் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்நிலையில், இவ்விரு தெய்வங்களுக்கும் பிற தெய்வங்களுக்குமாக ஆலயம் அமைவது அனைத்து இந்துக்களின் விருப்பத்தையும் நிறைவேற்றும். மலையாளச் சமூகமும் மிகவும் மகிழ்ச்சியடையும்,” என்றார் திரு சண்முகம்.

புதிய ஆலயத்தின் திட்டங்களை மேற்பார்வையிடும் திரு ரவீந்திரன், சபரிமலை பாணியிலான ஐயப்பன் சந்நிதியின் 18 படிகள், குருவாயூர் ஆலயத்தால் ஈர்க்கப்பட்ட கூறுகள் உள்ளிட்ட பாரம்பரியக் கட்டடக் கலை அம்சங்களுடன் ஆலயம் கேரள பாணியில் கட்டப்படும் என்று கூறினார்.

“கோயிலில் அதிக பக்தர்கள் வழிபடுவதற்கு இடமளிக்கும் நோக்கத்துடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
ஆலயம்கட்டுமானம்ஈசூன்