சிங்கப்பூரில் ஏற்படக்கூடிய பேரிடர் குறித்த எச்சரிக்கையை விடுக்கும் கட்டமைப்பு ஒன்று 2026ஆம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் அறிவித்துள்ளார்.
கைப்பேசி மூலம் அவசரகாலக் குறுஞ்செய்திகளைப் பொதுமக்கள் பெற அந்தக் கட்டமைப்பு வழிவகுக்கும்.
கைப்பேசி ஒலிபரப்புக் கட்டமைப்பு ஒன்றை நிறுவ சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை உள்ளூர்த் தொலைதொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாகத் திரு டோங் குறிப்பிட்டார்.
கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் புதன்கிழமை (ஆகஸ்ட் 20) நடைபெற்ற ஆசியான் உத்திபூர்வ கொள்கை கலந்துரையாடலில் பேசிய திரு டோங், “பாதிக்கப்பட்ட வட்டாரத்தின் நிகழ்வுகளைப் பொதுமக்களுக்கு விரைவாகத் தெரிவிக்க அதிகாரிகளுக்கு உதவுவதோடு கைப்பேசி ஒலிபரப்புக் கட்டமைப்பு அவர்களின் கைப்பேசிகளுக்கு அவசரகாலக் குறுஞ்செய்திகளை நேரடியாக அனுப்பிவிடும்,” என்றார்.
எடுக்கப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த தெளிவான வழிகாட்டுதலை அந்தக் குறுஞ்செய்திகள் பொதுமக்களுக்கு வழங்கும் என்றார் திரு டோங்.
அரசாங்க அதிகாரிகள், அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள், பேரிடர் நிர்வாகத்தில் ஈடுபடும் நிபுணர்கள் என ஆசியான் உத்திபூர்வ கொள்கை கலந்துரையாடலில் பங்கேற்ற கிட்டத்தட்ட 230 பேரிடம் திரு டோங் உரையாற்றினார்.
சிங்கப்பூரில் தற்போது சமிக்ஞை ஒலிகள், சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் மைரெஸ்போன்டர் (myResponder) செயலி உள்ளிட்ட பொது எச்சரிக்கைக் கட்டமைப்புகள் உள்ளன. அவை அருகில் உள்ள தீச் சம்பவங்கள் குறித்தும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டோர் குறித்தும் எச்சரிக்கை விடுக்கின்றன.
பயங்கரவாதச் செயல்கள் குறித்து எச்சரிக்கும் எஸ்ஜிசெக்யூர் செயலியும் பயன்பாட்டில் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பேரிடர் நிர்வாகத்தின்போது தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பம் எவ்வளவு முக்கியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.
“அவசரகாலங்களில் பொதுமக்களுக்குத் துல்லியமாகவும் விரைவாகவும் தகவல்களைக் கொண்டுசேர்ப்பது மிக முக்கியம்,” என்றார் அவர்.
பேரிடர் நிர்வாகத் திறன்களை வளர்த்துக்கொள்ள ஆசியான் நாடுகள் புத்தாக்கத்தை அரவணைக்கவேண்டும் என்றும் திரு டோங் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, பேரிடரைச் சமாளிக்கவும் முன்கூட்டியே அதுபற்றி அறிந்துகொள்ளவும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவலாம் என்று திரு டோங் குறிப்பிட்டார்.