இந்த ஆண்டு நவம்பர் பிற்பகுதியிலும் டிசம்பர் மாதத் தொடக்கத்திலும் ஏற்பட்ட கடுமையான வெள்ளம், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட இந்தோனீசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு அவசர மனிதநேய உதவிகளை வழங்குவதற்காக ஆசிய அவசரகால வெள்ள நிவாரண இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
ரஹ்மத்தான் லில் ஆலமின் எனப்படும் லாப நோக்கமற்ற அறநிறுவனம் இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த நிதி திரட்டும் இயக்கமானது இந்த மாத இறுதி வரை செயல்படும். பள்ளிவாசல்களில் இதற்கான நிதிச் சேகரிப்பு டிசம்பர் 25ஆம் தேதி வரை நடத்தப்படும்.
இந்தோனீசியாவின் அச்சே, வட சுமத்ரா, மேற்கு சுமத்ரா ஆகிய பகுதிகளில் வாரக்கணக்கில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட கொடிய வெள்ளம், நிலச்சரிவுகளால் அங்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 50 மாவட்டங்களில் குறைந்தது 1,390 பேர் உயிரிழந்தனர். 330க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. 770,000க்கும் அதிகமானோர் தங்கள் இருப்பிடங்களை இழந்து, இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சென்ற மாத இறுதியிலிருந்து இலங்கை முழுவதும் தீவிரமடைந்த பருவமழையினால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம், நிலச்சரிவுகள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.
20,000க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. மேலும், பரவலான உள்கட்டமைப்புச் சேதங்கள் காரணமாக நாட்டின் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியில் மக்கள் சீரான மின்சாரம் அல்லது தூய்மையான குடிநீர் வசதி இல்லாமல் தவிக்கின்றனர்.
ரஹ்மத்தான் லில் ஆலமின் அறநிறுவனம், ‘மெர்சி ரிலீஃப்’, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தோனீசியாவிலும் இலங்கையிலும் இக்கட்டான நிலையில் உள்ள மக்களுக்குத் தேவையான மிக முக்கியமான உதவிகளை வழங்கவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வெள்ளம், நிலச்சரிவுகளால் இடம்பெயர்ந்த அல்லது கடுமையாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உயிர் காக்கும் உதவிகளை வழங்குவதற்காக $150,000 நன்கொடை வழங்க அந்த அறநிறுவனம் உறுதிபூண்டுள்ளது.
இந்த இயக்கம் மூலம் அது, மீட்பு நடவடிக்கைகள், முதலுதவி, அத்தியாவசிய நிவாரணப் பொருள்கள் விநியோகம், சமூகத்தின் அவசரத் தேவைகளைக் கண்டறிந்து பூர்த்தி செய்தல் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்குமாறு சிங்கப்பூர்ச் சமூகத்திற்கும் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
மக்கள் வழங்கும் அனைத்துப் பங்களிப்புகளும் நேரடியாகக் களத்தில் மேற்கொள்ளப்படும் மனிதநேய நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.
அது, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உயிர் காக்கும் உதவிகளைப் பெறுவதை உறுதி செய்யும்.
கூடுதல் விவரங்களுக்கு elyasherzlynn@rlafoundation.org.sg அல்லது norlinda@rlafoundation.org.sg எனும் மின்னஞ்சல் முகவரிகள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

