ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவுப் போக்குவரத்து இணைப்பு, அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு வரும்போது, ஒவ்வொரு ரயிலும் 600க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும்.
ரயில்கள் மிகக் குறுகிய கால இடைவெளியில் இயக்கப்படும். ஒரு திசையில் ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 10,000 பயணிகள் வரைபயணம் செய்ய முடியும்.
இத்தகைய சூழலில், தவறுக்கு இடமே இருக்கக்கூடாது என்று உள்துறை இரண்டாம் அமைச்சர் சிம் ஆன் தெரிவித்தார்.
“எதிர்வினைத் திட்டங்களைச் சரியாக, விரைவாகச் செயல்படுத்துவதன் மூலம், உயிர்களைக் காக்கவும், சேதங்களைக் குறைக்கவும், இயல்பு நிலையை விரைவாக மீட்டெடுக்கவும் நாம் தயாராக இருக்க முடியும்,” என்று புதன்கிழமை (அக்டோபர் 28) நடைபெற்ற மலேசியா-சிங்கப்பூர் எல்லை தாண்டிய கூட்டுக் களப் பயிற்சியின் நிறைவு உரையில் பேசிய அவர் கூறினார்.
அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்ற பாவலைப் பயிற்சியில், மலேசியாவின் அரச மலேசியக் காவல்துறை, எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்பு, தீயணைப்பு, மீட்புத் துறை, சுகாதார அமைச்சு, மலேசிய ஆயுதப் படைகள், சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் (ஐசிஏ), சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவை பங்கேற்றன.
பாவனைப் பயிற்சியின்போது, பங்கேற்பாளர்களின் செயல்பாட்டுத் தயார்நிலை, நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு குறித்துச் சோதிக்கப்பட்டது.
ஆர்டிஎஸ் இணைப்பு ரயில், தடங்களில் ஏற்படக்கூடிய சிக்கலான அவசரகால சூழ்நிலையின் சரியான நேரத்தில், பயனுள்ள கூட்டு நிர்வாகத்தை உறுதி செய்வதில் இரு நாடுகளின் இயங்குநிலையும் அதில் அடங்கும்.
கூட்டுத் தீயணைப்பு நடவடிக்கைகள், மருத்துவ அவசரநிலைகள், காயமடைந்தவர்களை வெளியேற்றுதல், எல்லை தாண்டிய ஒருங்கிணைந்த அவசரகால நடவடிக்கைகள் ஆகியவை அந்தப் பாவனைப் பயிற்சியில் அடங்கும் என்று சிங்கப்பூரின் உள்துறை அமைச்சும் மலேசியாவின் தேசியப் பாதுகாப்பு மன்றமும் புதன்கிழமை வெளியிட்ட கூட்டு அறிக்கை தெரிவித்தது.
ஆர்டிஎஸ் இணைப்புச் சேவை தொடங்கப்பட்ட பிறகு, எல்லை தாண்டிய சம்பவங்களை முன்னணியில் இருந்து கையாளும் பணியாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான தெளிவான கட்டமைப்புகள், சட்டங்கள், செயல்பாட்டு நெறிமுறைகளை உள்ளடக்கிய கூட்டுத் திட்டங்களை, இரு நாடுகளின் செயல்பாட்டு அமைப்புகளும் 2023ஆம் ஆண்டு முதல் உருவாக்கி வருவதாகத் திருவாட்டி சிம் ஆன் தமது உரையில் குறிப்பிட்டார்.
இந்த ஒத்திகையின்போது, புக்கிட் சகாரில் அமைந்துள்ள மலேசியாவின் செயல்பாட்டு மையம், ஐசிஏவின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு மையத்துடன் நிகழ்நேரத்தில் தொடர்பு கொண்டு செயல்பட்டது.
