புத்தாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் விருது வழங்கி அங்கீகாரம்

வளர்ந்துவரும் தொழில்முனைவர் விருது 2026

புத்தாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் விருது வழங்கி அங்கீகாரம்

படம்: ஓசிபிசி வங்கி

10 Nov 2026 - 5:57 pm

3 mins read

வங்கிகள், ஊடகங்கள், வர்த்தகச் சங்கங்கள், அரசாங்கம் ஆகியவை ஒன்றிணைந்து தொழில் விரிவாக்கத்துக்கு உகந்த வலுவான சூழலை உருவாக்கும்போது தொழில்கள் வேகமாக வளர்ச்சியடைகின்றன என்று எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் கூறியுள்ளார்.

பிஸ்னஸ் டைம்ஸ் நாளிதழும் ஓசிபிசி வங்கியும் இணைந்து திங்கட்கிழமை (அக்டோபர் 26) நடத்திய இவ்வாண்டின் வளர்ந்துவரும் தொழில்முனைவர் விருது விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.

இவ்வாண்டின் வளர்ந்துவரும் தொழில்முனைவர் விருது விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் உரையாற்றினார்.
இவ்வாண்டின் வளர்ந்துவரும் தொழில்முனைவர் விருது விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் உரையாற்றினார். - படம்: ஓசிபிசி வங்கி

கடுமையான அழுத்தத்தில் உருவாகி மிளிரும் வைரங்களைப் போல, சவாலான பாதைகளைக் கடந்து புதிய நிறுவனங்கள் வெற்றியாளர்களாக உருவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“உண்மையான உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும், நிலவும் திறனற்ற தன்மைகளைச் சரிசெய்வதுமே தொழில்முனைவின் தொடக்கமாகும்,” என்று திருவாட்டி லோ சுட்டிக்காட்டினார். சவால்களுக்குப் பதிலாக வாய்ப்புகளைப் பார்ப்பதும் சாத்தியங்களை மதிப்புமிக்க தீர்வுகளாக மாற்றுவதற்கான விடாமுயற்சியைக் கொண்டிருப்பதும் தொழில்முனைவோரின் முக்கியப் பண்பு என்றும் அவர் சொன்னார்.

“புவிசார் அரசியல் பதற்றங்கள், விநியோகத் தொடர் சிக்கல்கள், உயரும் செலவுகள், நுகர்வோர் விருப்ப மாற்றங்கள் போன்ற நெருக்கடிகளுக்கு இடையே நிறுவனங்கள் நீக்குப்போக்குத்தன்மையுடன் செயல்படுவது நீண்டகால வளர்ச்சிக்கு அவசியம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

தொடக்கத்தில் மாதிரிப் பொருளை உருவாக்கி, சவால்களைக் கடந்து, பெரிய அளவில் தொழில் மாதிரியை வளர்க்க துணிச்சலும் மனவுறுதியும் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டின் வளர்ந்துவரும் தொழில்முனைவர் விருது விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் உரையாற்றினார்.
இவ்வாண்டின் வளர்ந்துவரும் தொழில்முனைவர் விருது விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் உரையாற்றினார். - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

பத்து ஆண்டுகளுக்குள் தொடங்கப்பட்ட நிறுவனங்களை அங்கீகரிக்கும் இவ்விருது விழா, 19வது ஆண்டாக நடைபெற்றது. இவ்விழா நிறுவனங்களுக்கு அங்கீகாரத்தையும் தொடர்புகளையும் வழங்கும் சமூகமாகச் செயல்படுகிறது என்று ஓசிபிசி வங்கியின் உலகளாவிய வணிக வங்கித் தலைவர் இலேன் ஹெங் தெரிவித்தார்.

கடந்த 2008 உலகப் பொருளியல் நெருக்கடி காலத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டம், தொழில்துறைத் தலைவர்களை இணைக்கும் தளமாக வளர்ந்துள்ளது.

ஜேடபிள்யூ மேரியட் ஹோட்டலில் நடைபெற்ற விழாவில், சிங்கப்பூர், ஹாங்காங், இந்தோனீசியா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒன்பது நிறுவனங்கள் விருதுகளை வென்றன.

வளர்ந்துவரும் தொழில்முனைவர் விருது விழா ஜேடபிள்யூ மேரியட் ஹோட்டலில் திங்கட்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்றது.
வளர்ந்துவரும் தொழில்முனைவர் விருது விழா ஜேடபிள்யூ மேரியட் ஹோட்டலில் திங்கட்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்றது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

ஆண்டு வருமானம் 20 மில்லியன் வெள்ளிக்கு உட்பட்ட நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட கிட்டத்தட்ட 600 விண்ணப்பங்களிலிருந்து தேர்வான வெற்றியாளர்களுக்கு 200,000 வெள்ளி வட்டியில்லாக் கடன், ஊடக விளம்பரம், வணிக ஆலோசனைகள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

வளர்ந்துவரும் தொழில்முனைவர் விருதை வெப்பமண்டலக் காலநிலைக்கு ஏற்ற உயர்தர மெத்தைகள், உறக்கப் பொருள்களைத் தயாரிக்கும் சிங்கப்பூரின் ‘வூசா ஸ்லீப்’, காப்பீட்டுக் கோரிக்கைகளைத் தானியக்கமாக்கும் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஹாங்காங்கின் ‘மீடிகான்சென்’ ஆகியவை தட்டிச்சென்றன.

அதிக நம்பிக்கையளிக்கும் புதிய நிறுவன விருதை கட்டடங்கள், உள்கட்டமைப்புகளைக் கண்காணிக்கும் ஏஐ சேவை நிறுவனமான ஹாங்காங்கின் ‘ஆல்ஃபா ஏஐ’, தரவு மையக் கட்டமைப்புத் தொழில்நுட்ப நிறுவனமான மலேசியாவின் ‘ஹைப்பர்ஸ்கேல் டிசிஎஸ்’ ஆகியவை வென்றன.

மின்கலப் பாதுகாப்பு, வெப்ப மேலாண்மைத் தொழில்நுட்ப நிறுவனமான சிங்கப்பூரின் ‘மேட்வெர்க்ஸ்’, கழிவுக் கையுறைகளை மறுசுழற்சி செய்யும் பசுமை நிறுவனமான மலேசியாவின் ‘ஜியோமேக்ஸ் ரப்பர்’, ‘பிரெய்ல்’ எழுத்துமுறை பொறிக்கப்பட்ட மாதவிடாய் திண்டுகளைத் தயாரிக்கும் நிறுவனமான ‘லாஃப்ரே குளோபல்’, கடற்கழிவுகளைக் கட்டுமானப் பொருள்களாக மாற்றும் நிறுவனமான இந்தோனீசியாவின் ‘பரோங்பாங் ராவ் லேப்’ ஆகிய நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் சார்ந்த நிலைத்தன்மை விருது வழங்கப்பட்டது.

முதியோர்க்கான காற்றோட்டமான, அதிக உடல் கழிவுகளை உறிஞ்சும் திறன் கொண்ட பராமரிப்புப் பொருள்களைத் தயாரிக்கும் சிங்கப்பூரின் எக்செல் லைஃப்கேர் (ஏர்) நிறுவனம் அதிக நம்பிக்கையளிக்கும் பசுமை நிறுவன விருதைக் கைப்பற்றியது.

குறிப்புச் சொற்கள்