தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொண்டாட்ட காலத்தில் கொடுத்து உதவுதல் கோடி பெறும்

2 mins read
9677cb63-a622-4d4b-99f1-37f1893b0844
தெமாசெக் கடைவீட்டில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சி. - படம்: தேசிய தொண்டூழிய, அறக்கொடை நிலையம்

பண்டிகைக் காலத்தில் பிறருக்குக் கொடுத்து உதவும் குணத்தை வளர்த்து, நல்ல நோக்கங்களுக்காக ஒன்றுகூடுவதை வலியுறுத்தும் ‘கிரேட் சிங்கப்பூர் கிவ்’ இயக்கம் அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.

தேசிய தொண்டூழிய, அறக்கொடை நிலையம் (National Volunteer and Philanthropy Centre) சார்பில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம் ‘அனைவரும் கொடுக்கலாம்’ (Everyone Can Give) எனும் கருப்பொருளில் நடைபெறுகிறது.

தேசிய சமூக சேவை மன்றம், அறநிறுவனங்கள், சமூக அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த ஏறத்தாழ 150 பேர் பங்கேற்ற இந்தத் தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை (அக்டோபர் 9) தெமாசெக் கடைவீட்டில் நடைபெற்றது.

அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை நடைபெறும் இந்த இயக்கம், கடந்த ஆண்டு திரட்டப்பட்ட 42 மில்லியன் வெள்ளியைவிட கூடுதலான நிதி திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இவ்வாண்டு ‘கிரேட் சிங்கப்பூர் கிவ்’ இயக்கத்தின் முக்கிய நோக்கங்கள் குறித்தும் நிகழ்ச்சிகள் குறித்தும் விளக்கிய அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி சோ.
இவ்வாண்டு ‘கிரேட் சிங்கப்பூர் கிவ்’ இயக்கத்தின் முக்கிய நோக்கங்கள் குறித்தும் நிகழ்ச்சிகள் குறித்தும் விளக்கிய அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி சோ. - படம்: தேசிய தொண்டூழிய, அறக்கொடை நிலையம்

அத்துடன், 10,000 தொண்டூழியர்களை இணைத்து, பிறருக்கு உதவுவதை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்ற வாய்ப்புகளை வழங்கவும் அது திட்டமிட்டுள்ளது.

அதற்காக, எஸ்ஜி60 கொண்டாட்டங்களின் பகுதியாகத் தொடங்கப்பட்ட ‘எஸ்ஜி ‌ஷேர்’ திட்டத்தை மையமாகக் கொண்டு அமைப்பின் இணையத்தளம் புதுப்பிக்கப்படும்.

மேலும், தீவு முழுவதும் ஒளியூட்டு, கலை நிகழ்ச்சிகள் மூலமும், நிறுவனங்களின் உதவியுடன் சலுகைகள் அளிப்பதன் மூலமும் நிதி திரட்டு இயக்கங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.

‘எஸ்ஜி ‌ஷேர்’ குறித்தும், அதன் நோக்கம், பயன்கள் குறித்தும் விளக்கிய கலந்துரையாடல் அமர்வில் பங்கேற்ற (இடமிருந்து) சமூக உண்டியல் அமைப்பின் கொடைப் பங்காளிகள் பிரிவு இயக்குநர் பேர்லின் செங், ‘மைண்ட்ஃபுல்’ சமூக அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் ஓய்,  ‘மைன்ட்ஃபுல’ இளையர் ஆதரவு, ஈடுபாட்டுப் பிரிவின் தலைவர் ஜஸ்டின் லூ.
‘எஸ்ஜி ‌ஷேர்’ குறித்தும், அதன் நோக்கம், பயன்கள் குறித்தும் விளக்கிய கலந்துரையாடல் அமர்வில் பங்கேற்ற (இடமிருந்து) சமூக உண்டியல் அமைப்பின் கொடைப் பங்காளிகள் பிரிவு இயக்குநர் பேர்லின் செங், ‘மைண்ட்ஃபுல்’ சமூக அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் ஓய், ‘மைன்ட்ஃபுல’ இளையர் ஆதரவு, ஈடுபாட்டுப் பிரிவின் தலைவர் ஜஸ்டின் லூ. - படம்: தேசிய தொண்டூழியம் மற்றும் அறக்கொடை நிலையம்

படைப்பாற்றலையும் ஒருங்கிணைப்பையும் ஊக்குவிக்கும் வண்ணம் டிசம்பர் 1 முதல் 7 வரை ‘எஸ்ஜி கேர்ஸ் ஈகை வாரமும்’ (SG Cares Giving Week) நடைபெறும்.

“பிறருக்குக் கொடுப்பது என்பது பணம், பொருள் மட்டுமல்ல. சேவை, திறன் ஆகியவற்றையும் வழங்கலாம். இவ்வகை நிகழ்ச்சிகளின் மூலம், அனைத்துலக நிறுவனங்கள், அமைப்புகள், தனிமனிதர்களை ஒன்றிணைக்க முடியும் என நம்புகிறோம். இதன்மூலம், எங்கள் பங்காளித்துவ அறநிறுவன அமைப்புகளைச் சேர்ந்த பலரும் பலனடைவார்கள்,” என்றார் தேசிய தொண்டூழிய, அறக்கொடை நிலையத்தின் சந்தைப்படுத்தல், தகவல் தொடர்பு இயக்குநர் செரீன் ஆஷ்லி சென்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவளித்துவரும் ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’ (ஐஆர்ஆர்) அமைப்பைச் சேர்ந்த விருந்தா டிங்க்ரா, “இந்த இயக்கத்தில் கைகோத்துள்ளது மகிழ்ச்சி. வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் சிறுபொருள்களை வழங்குவதில் தொடங்கி, திறன் மேம்பாடுவரை பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளும் எங்கள் அமைப்பு குறித்து சமூகத்தில் பலருக்கும் தெரிய வரும் எனவும் அதன் மூலம் ஆதரவு பெருகும் எனவும் நம்புகிறோம்,” என்றார்.

“பண்டிகைக் காலங்கள் நமக்கு இயல்பாகத் தெரிந்தாலும் வீட்டைப் பிரிந்து இருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட பலதரப்பினருக்கும் உதவிகள் தேவைப்படலாம். அந்தக் காலகட்டத்தை கொடுத்து உதவுவதற்கான காலமாக, ஒன்றிணைதலை உணர்த்தும் காலமாக மாற்ற விரும்புவது மேன்மையான நோக்கம். இது மனநிறைவு வழங்கும் ஒன்று,” என்றார் ‘ஐஆர்ஆர்’ அமைப்பைச் சேர்ந்த அஸ்வினி பிரியா.

குறிப்புச் சொற்கள்