தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கங்கள் தாக்கிய ஊழியரின் கழுத்து முறிந்தது

2 mins read
04aeb629-de62-48a2-ac9c-22dd7141b78d
பாதுகாப்பு வாகனத்திலிருந்து வெளியேறிய ஊழியர் சிங்கங்களுக்கான சிறப்பு காட்சித் தளத்திற்குச் சென்ற 58 வயது ஊழியரைச் சிங்கங்கள் தாக்கின. - படம்: த நே‌‌ஷன்

பேங்காக்: தாய்லாந்தில் உள்ள சஃபாரி வோர்ல்டு விலங்கியல் தோட்டத்தில் சிங்கங்கள் தாக்கி உயிரிழந்த ஊழியரின் கழுத்து முறிந்துள்ளதை உடற்கூறாய்வு முடிவுகள் காட்டுகின்றன.

தாய்லாந்துக் காவல்துறையின் தடயவியல் மருத்துவக் கழகம் வெளியிட்ட உடற்கூறாய்வு முடிவுகள் ஆடவரின் மூச்சுக்குழாய் கிழிக்கப்பட்டதையும் சுட்டியது.

கழகத்தின் தளபதி, காவல்துறை மேஜர் ஜெனரல் விரூன் சுபசிங்சிரிபிரீசா, காவல்துறை பொது மருத்துவமனையில் சஃபாரி வோர்ல்டு ஊழியர், 58 வயது ஜியென்னின் உடற்கூறாய்வு நிறைவுபெற்றதைக் குறிப்பிட்டார். அவரது நல்லுடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஊழியரின் உடலில் பல்வேறு மோசமான காயங்கள் ஏற்பட்டிருந்ததுடன் பல எலும்புகள் முறிந்திருந்ததைப் பரிசோதனை முடிவுகள் காட்டியதை திரு விரூன் பகிர்ந்துகொண்டார்.

மூன்று காயங்கள் மரணத்தை ஏற்படுத்தியதாகத் திரு விரூன் சுட்டினார். முறிந்த கழுத்தால் ஊழியரால் அசைய முடியாமல் போனது என்ற அவர், அவரது மூச்சுக்குழாயும் கிழிந்ததால் உதவிக்கு யாரையும் ஊழியரால் அழைக்க முடியவில்லை என்றார். தொடைப் பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்தால் முக்கிய நரம்புகள் அறுபட்டதில் ரத்தமும் அதிக அளவில் வெளியேறியது.

சமூக ஊடகங்களில் கூறப்படுவதுபோல ஜியெனின் உறுப்புகளைச் சிங்கங்கள் உண்ணவில்லை என்று திரு விரூன் விளக்கினார். ஊழியரின் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இருந்தன. ஊழியரின் தொண்டை, மார்பு, இடது தொடை என உடலில் பல்வேறு வெட்டுக்காயங்கள் மட்டும் ஏற்பட்டதைத் திரு விரூன் குறிப்பிட்டார்.

ஜியெனின் விலா எலும்பும் தோள்பட்டையில் உள்ள எலும்பும் முறிவுற்றன.

பாதுகாப்பு வாகனத்திலிருந்து வெளியேறிய ஊழியர் சிங்கங்களுக்கான சிறப்பு காட்சித் தளத்திற்குச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர். அப்போது முதுகுப் பக்கத்தைக் காட்டியவாறு நின்ற ஜியென்மீது சிங்கம் ஒன்று பாய்ந்து அவரைத் தரையில் இழுத்து தாக்கத் தொடங்கியது. மேலும் நான்கு சிங்கங்கள் சேர்ந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்