ஊழியர்களின் வருமான விவரம்: 11,000 நிறுவனங்கள் உரிய நேரத்தில் சமர்ப்பிக்கத் தவறின

2 mins read
01dd1399-cabc-4fa3-ae71-14134b7eab55
தங்கள் ஊழியர்களின் வருமான விவரங்களை மார்ச் 1க்குள் சமர்ப்பிக்குமாறு நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் நினைவூட்டியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஊழியர்களின் வருமான விவரங்களை சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் தரவுத்தளத்தில் தானாக சேர்த்துக்கொள்ளும் திட்­டத்­துக்­குத் தகுதிபெறும் 11,000 நிறுவனங்கள், 2024ல் தங்­க­ள் ஊழியர்களின் வரு­மா­ன விவரங்களைத் தாக்­கல் செய்வதற்கான காலக்கெடுவைத் தவறவிட்டன.

இதனால் 140,000 ஊழியர்களுக்கு வரி மதிப்பீடுகள் சரியில்லாமல் போனது, அல்லது அவற்றுக்குத் தாமதம் ஏற்பட்டது என்று ஆணையம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) தெரிவித்தது.

மீண்டும் குற்றம் புரிந்த மொத்தம் 654 நிறுவனங்கள் மீது 2024ல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, $790,000க்குமேல் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலானவை உணவு பானம், மொத்த விற்பனை வர்த்தகம், கட்டுமானத் துறைகளைச் சேர்ந்தவை என ஆணையம் கூறியது.

தங்கள் ஊழியர்களின் வருமான விவரங்களை மார்ச் 1க்குள் சமர்ப்பிக்குமாறு நிறுவனங்களுக்கு ஆணையம் நினைவூட்டியது.

2024ல் ஐந்துக்கும் குறைவான ஊழியர்களைக் கொண்டிருந்தாலும், ஊழியர்களின் வருமான விவரங்களை தானாக சேர்த்­துக்கொள்ளும் திட்டத்தில் ஏற்கெனவே சேர்ந்துள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும்.

2024ல் ஐந்து அல்லது அதற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கும் அந்த விதி பொருந்தும்.

ஊழியர்களின் வருமான விவரங்களைக் காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்கத் தவறும் நிறுவனங்களுக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். விதிகளுக்கு ஒத்துப்போகாத நிறுவனங்களின் முக்கிய நபர்களான இயக்குநர்கள் அல்லது பங்காளிகளுக்கு $10,000 வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தானாக சேர்த்­துக்கொள்ளும் திட்­டத்தில், 2025ல் புதிதாக 12,500 நிறுவனங்கள் சேர்ந்துள்ளதாக ஆணையம் தெரிவித்தது.

இதன்மூலம், இத்திட்டத்தில் இணைந்துள்ள நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய 120,000ஆக அதிகரித்துள்ளது.

இத்திட்டத்துக்கான தங்கள் கடமைகளைத் தெரியப்படுத்தும் விதமாக, ஜனவரியில் ஆணையத்திடமிருந்து அவற்றுக்குக் கடிதம் கிடைத்திருக்கும்.

தானாக சேர்த்­துக்கொள்ளும் திட்­டத்தால் 2025ல் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பலனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்