நாற்பது வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடைய, பணியிடைக்காலத்தில் உள்ள சிங்கப்பூரர்கள், டிசம்பர் 1ஆம் தேதி முதல் தங்களின் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவி நிதியைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட 140 கூடுதல் பயிற்சித் திட்டங்களில் சேரலாம்.
பயிற்சிக்கு மானியம் அளித்து, தங்கள் திறன்களை மேம்படுத்த அல்லது புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு நிதி உதவி வழங்கும் ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் லெவல்-அப் திட்டம்’, நிதிச் சேவைகள், தகவல்தொடர்புத் தொழில்நுட்பம், கடல்சார், கடலோரச் சேவைகள் போன்ற துறைகளில் 60 பயிற்சித் திட்டங்களை உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும்.
இதில் ஈடுபட்டுள்ள துறைசார் அமைப்புகளில் தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ), சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம், சிங்கப்பூர் வங்கி, நிதிக் கழகம் ஆகியவை அடங்கும்.
உதாரணமாக, தொழில்நுட்பத் துறைக்கு மாற விரும்பும் நடுத்தரப் பணியாளர்கள், ஐஎம்டிஏவின் தொழில்நுட்பப் பயிற்சி, வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இத்திட்டம், பயிற்சியுடன் வேலைவாய்ப்பையும் இணைக்கிறது.
எஞ்சிய பயிற்சிகளில், சுகாதாரம், பொறியியல், ஊடகம், குழந்தைப்பருவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏறக்குறைய 80 பணியாளர் திறன் தகுதி முழுத் தகுதிப் பயிற்சிகள் (டபிள்யூஎஸ்க்யூ) அடங்கும்.
ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட வேலைக்குத் தேவையான திறன்களையும் தகுதிகளையும் பெறுவதற்காக டபிள்யூஎஸ்க்யூ பயிற்சிகளின் முழுத் தொகுப்பையும் நிறைவு செய்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் முழுத் தகுதியைப் பெறுகிறார்கள். இது ஒரு புதிய துறைக்கோ அல்லது வேலைக்கோ செல்ல அவர்களுக்கு உதவும்.
வேகமாக மாறிவரும் பொருளியலில் 40 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் போட்டித்தன்மையுடனும் பொருத்தமானவர்களாகவும் இருக்க உதவுவதற்காக, ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் லெவல்-அப்’ திட்டம் 2024ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
“வாழ்க்கைத் தொழிலின் தொடக்கத்தில் நாம் கற்றுக்கொண்ட திறன்கள், காலப்போக்கில் போதுமானதாக இல்லாமல் போகலாம். இது மிகுந்த கவலையை ஏற்படுத்தக்கூடிய ஒன்றுதான். ஆனால், அதே வேளையில் தொழில்நுட்பம் புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளையும் திறந்து வைக்கிறது,” என்று புதன்கிழமை (அக்டோபர் 28) கரையோரப் பூந்தோட்டத்தில் நடைபெற்ற ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஃபெலோஷிப்ஸ்’, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் முதலாளிகள் விருது விழாவில், மனிதவள தற்காலிக அமைச்சர் ஜாஸ்மின் லாவ் தெரிவித்தார்.
இந்தப் பயிற்சிகளுக்குக் கிடைத்துள்ள வரவேற்பு ஊக்கமளிப்பதாக திருவாட்டி லாவ் குறிப்பிட்டார்.
ஜூன் 30 நிலவரப்படி, கிட்டத்தட்ட 80,000 பேர் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவி நிதி பணியிடைக்காலத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். 11,000க்கும் மேற்பட்டோர் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பணியிடைக்காலப் பயிற்சிப்படித் தொகையைப் பெற்றுள்ளனர் என்றார் அவர்.
