ராஃபிள்ஸ் சிட்டி கட்டடத்துக்கு வெளியே அந்தரத்தில் சாய்ந்த கொண்டோலா எனும் தொங்கு மேடையிலிருந்து இரண்டு ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
கட்டடத்தின் 28ஆம், 29ஆம் இடைப்பட்ட மாடிகளில் காலை சுமார் 11.20 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மீட்புப் பணியில் ஈடுபட்டதாகத் தெரிவித்தது.
“சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு அதிகாரிகள் தொங்கு மேடை எந்த அளவு நிலையாக இருக்கிறது என்பதை சோதித்ததோடு ஊழியர்களின் நிலை குறித்து கண்டறிந்தனர்,” என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பிற்பகல் 2 மணிவாக்கில் பதிவிட்டது.
கட்டடத்தின் 29ஆம் மாடியிலிருந்து 30ஆம் மாடி வரை பேரிடர் உதவி மீட்புக் குழுவைச் (டார்ட்) சேர்ந்த அதிகாரிகள் மீட்புக் கருவிகளை அமைத்தனர்.
தொங்கு மேடை பாதுகாப்பு கம்பிகளால் நிலைப்படுத்தப்பட்ட பின் டார்ட் மீட்பு அதிகாரி அதில் இறங்கினார்.
சம்பவத்தின்போது பாதுகாப்பு வார்களை அணிந்திருந்த ஊழியர்கள் 29ஆம் மாடிக்கும் 30ஆம் மாடிக்கும் இடையில் உள்ள சன்னல்கள் வழியாகக் கட்டடத்துக்குள் கொண்டுவரப்பட்டனர்.
இரண்டு ஊழியர்களின் உடல்நிலையும் பரிசோதிக்கப்பட்ட பின் உதவி மருத்துவர்கள் அவர்களை ராஃபிள்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
தொடக்கக் கட்ட சோதனைகளில் ஊழியர்களுக்குக் காயம் ஏற்படவில்லை என்பது தெரியவந்ததை ராஃபிள்ஸ் சிட்டி பேச்சாளர் பகிர்ந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
கட்டடக் குத்தகைதாரரால் பணியமர்த்தப்பட்ட அந்த ஊழியர்கள் கட்டடத்தின் முகப்பில் வழக்கமான பணிகளை மேற்கொண்டபோது காலை சுமார் 11.20 மணியளவில் வானிலை மாறியது.
அதையடுத்து உடனடியாக வேலையை நிறுத்தும்படி அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
அப்போது கீழே இறக்கப்பட்ட தொங்கு மேடை திடீரென ஒரு பக்கமாகச் சாய்ந்தது.
“வானிலை காரணமாகத் தொங்கு மேடையைச் சரிசெய்வதோ கீழே இறக்குவதோ ஆபத்தானது என்று கருதப்பட்டது.
“பாதுகாப்பு கயிறுகள் அனைத்தும் சீராக இருந்தன,” என்ற பேச்சாளர், ஊழியர்கள் 12.30 மணியளவில் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகக் கூறினார்.
ராஃபிள்ஸ் சிட்டி கட்டடத்தில் 42 மாடிகள் உள்ளன. சம்பவத்தை அடுத்து கட்டட நுழைவாயிலைப் பாதுகாவலர்கள் மூடினர்.
தொங்கு மேடை ஜூன் மாதம்தான் முழுமையான பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகப் பேச்சாளர் சொன்னார்.


