புகைமூட்டம் காரணமாகக் குறுகிய காலத்திற்கோ தற்காலிகமாகவோ வேலை நிறுத்திவைக்கப்பட்டால், அதற்கான செலவை முதலாளிகளே ஏற்கவேண்டும் என்று மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஊழியர்களின் சம்பளத்திலோ அவர்களுக்கான விடுப்பு உரிமையிலோ எவ்விதப் பிடித்தமும் செய்யக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
வணிகச் செயல்பாடுகள் நீண்ட காலத்திற்கு முடங்கினால் மட்டுமே, முதலாளிகள் தொழிற்சங்கத்துடனும் ஊழியர்களுடனும் கலந்துரையாடி, பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று திரு தினேஷ் குறிப்பிட்டார். வெளிப்புறங்களில் வேலை செய்வோர் உள்ளிட்ட எளிதில் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்கள் மீதான புகைமூட்டத்தின் தாக்கம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
இணையவழி விநியோக ஊழியர்களின் பாதுகாப்பு, வருமானம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சார்லின் சென் இதுகுறித்துக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த மனிதவளத் துணை அமைச்சர் ஃபூ செசியான், இக்காலகட்டத்தில் விநியோக நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஓய்வு எடுக்குமாறும் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும் நினைவூட்டல்களை அனுப்ப வேண்டும் என்றார்.
விநியோகத்தை முடிக்கக் கூடுதல் நேரமானால் ஊக்கத்தொகையைக் குறைப்பது, வேலை ஒதுக்கீட்டை நிறுத்துவது அல்லது சம்பளத்தைப் பிடிப்பது போன்ற அபராத நடவடிக்கைகளை நிறுவனங்கள் எடுக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். நிதி நெருக்கடியைச் சந்திக்கும் ஊழியர்கள் சமூகச் சேவை அலுவலகங்களை அணுகி உதவி பெறலாம் என்று திரு ஃபூ கூறினார்.
வெளிப்புற வேலைகளை ஒருமணி நேரத்துக்கான பிஎம்2.5 காற்றுத் தர நிலவரப்படி முதலாளிகள் மாற்றியமைக்க வேண்டும் என்றும் மறுநாள் பணிகளைத் திட்டமிட 24 மணி நேரத்துக்கான பிஎஸ்ஐ முன்னுரைப்பைப் பயன்படுத்த வேண்டும் என்றும் திரு தினேஷ் கூறினார்.
மனிதவள அமைச்சு பணியிடச் சோதனைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும். வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதால் ஒப்பந்ததாரர்களுக்குச் செயல்பாட்டுச் செலவு அதிகரிக்கக்கூடும் என்பதை ஏற்றுக்கொண்ட அவர், சேவை வாங்குவோர் நியாயமான விலைத் திருத்தங்களுக்கு நீக்குப்போக்குடன் இடமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
