சிங்கப்பூரில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை பெற்றுவரும் ஏறத்தாழ 10,000 நோயாளிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் வேலை இடங்களில் அவர்களைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதற்காகவும் தேசிய சிறுநீரக அறநிறுவனத்துடன் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை வழங்கும் ஐந்து அமைப்புகளும் ஒன்றிணைந்து புதிய தளம் ஒன்றை அமைத்துள்ளன.
டாவிட்டா, டயாவெரம், சிறுநீரக ரத்தச் சுத்திகரிப்பு அறநிறுவனம், தேசிய சுறுநீரக அறநிறுவனம், சாட்டா காம்ஹெல்த், சூ சி அறநிறுவனம் ஆகிய ஆறு அமைப்புகள் இந்தத் திட்டத்தில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
ரத்தச் சுத்திகரிப்பு செய்துகொள்ளும் நோயாளிகள் எதிர்கொள்ளும் சவால்களை 45 வயது என்.நந்தகுமாரன் நன்கு அறிவார்.
திடீரென உடலில் நீர் கோத்துக்கொண்டு வீக்கம் ஏற்பட்டதால், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் துடிப்புமிக்க பணியிலிருந்து விலகி, கடந்த நான்கு ஆண்டுகளாக வேலையின்றித் தவித்தார் திரு நந்தகுமாரன்.
“திடீரென எதையும் செய்ய முடியாமல் முடங்கியது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. எங்குச் செல்வது என்று தெரியாமல் திகைத்தேன்,” எனத் தமது சவால்களை அவர் பகிர்ந்துகொண்டார். திரு நந்தகுமாரன் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வருகிறார்.
ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகள் எதிர்கொள்ளும் வேலைவாய்ப்புச் சவால்களை எந்தவொரு தனி அமைப்பும் தனியாக எதிர்கொள்ள முடியாது என்று தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் தலைவர் ஆங் ஹாவ் யாவ் தெரிவித்தார்.
“நோயாளிகளுக்கு முன்னுரிமை அளித்து, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே திட்டத்தின் இலக்கு, என்று அவர் கூறினார்.
“ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளுக்கு வேலை என்பது வெறும் வருமானம் மட்டுமன்று. அது அவர்களின் தன்மதிப்பு, தற்சார்பு மற்றும் சமூகத் தொடர்புகளுக்கான ஒரு வாழ்வாதாரமாகும்,” என்று சூ சி அறநிறுவனத்தின் தலைமை நிர்வாகி லோ சுவி சே தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிகிச்சைக்கான நேர அட்டவணையில் முதலாளிகள் சற்று நீக்குப்போக்கான அணுகுமுறையைக் கையாண்டால் ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளாலும் மற்றவர்களைப் போலத் திறம்படவும் நம்பகத்தன்மையுடனும் பணியாற்ற முடியும் என டேவிட்டா சிங்கப்பூரின் தலைமை நிர்வாகி சியாவ் யாங் டோங் தெரிவித்தார்.
நாட்பட்ட சிறுநீரக நோய் என்பது இப்போது வெறும் சுகாதாரப் பிரச்சினை மட்டுமன்று, அது ஒட்டுமொத்த நாட்டுக்கான சவால் என்றும் முதலாளிகள் நோயாளிகளின் மருத்துவ நிலையைத் தாண்டி அவர்களின் திறமைகளையும் மீள்திறனையும் மதித்து வாய்ப்பளிக்க முன்வர வேண்டும் என்றும் இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

