இளையர் நலன்காக்க இணைந்த ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரவாசிகள்

மின்சிகரெட் அறவே இல்லாத சிங்கப்பூர்; தலைமுறைகள் இணைந்த லட்சியப் பயணம்

2 mins read
a3c8dedd-4ae6-47b5-aa8d-ff3c32a44f2c
குடியிருப்பாளர்கள், மூத்தோர், இளையோர் எனத் தலைமுறைகள் திரளாகப் பங்கேற்ற ‘மின்சிகரெட் அற்ற சிங்கப்பூர்’ நடைப்பயணத்தைச் சட்ட அமைச்சரும் இரண்டாம் உள்துறை அமைச்சருமான திரு எட்வின் டோங் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். - படம்: ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி

இளையர்களின் வளமான எதிர்காலத்தை வலுவாக்க, அவர்களின் உடல், உள நலனைக் காக்க, தலைமுறைகள் இணைந்த லட்சிய நடைப்பயணம் ஈஸ்ட்-கோஸ்ட் வட்டாரத்தில் நடைபெற்றது.

இளையர் நலன், குடும்பங்களுக்கான ஆதரவு தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குடியிருப்பாளர்கள், பெற்றோர், இளையர் என ஏறத்தாழ ஆயிரம் பேர் சமூகமாக இணைந்து மின்சிகரெட் அறவே இல்லாத சிங்கப்பூரை வடிவமைக்கும் நோக்கத்திற்கான தங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினர்.

இளையர்களின் நல்வாழ்வைச் சூறையாடும் மின்சிகரெட் புழக்கத்தின் தீங்கு, அதில் சிக்காமல் இருப்பதற்கு இளையர்களுக்கு உள்ள ஆதரவு ஆகியவற்றைப் பறைசாற்றும் குறிக்கோளுடன் நடைபெற்ற அந்த நடைப்பயணத்தைச் சட்ட அமைச்சரும் இரண்டாம் உள்துறை அமைச்சருமான திரு எட்வின் டோங் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் டோங்குடன், ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகர்களும் அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான திரு தினேஷ் வாசு தாஸ், திருமதி ஹஸ்லினா அப்துல் ஹலிம் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின்போது உரையாற்றிய திரு டோங், இளையர்களின் நலனையும் போதைப்புழக்கம் அற்ற வாழ்வையும் முன்னிறுத்துவதில் சமூகமாக ஒன்றிணைந்து செயல்படுவதன் வலிமையையும் அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

‘‘ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில், தலைமத்துவம் என்பது செயல்பாட்டைச் சார்ந்தது. நமது குடும்பங்களையும் எதிர்காலத் தலைமுறையினரையும் மேலும் உறுதியாக்குவது எதுவோ, அதற்காக நிற்பது,’’ என்றார் மக்கள் கழகத் தலைவருமான திரு டோங்.

போதைப் புழக்கம், மின்சிகரெட் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் இளையர்களின் சவால்களை விளக்கும் ‘ஒன் லாஸ்ட் ப்ரெத்’ உள்ளிட்ட குறும்படங்களும் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டன.

பகடிவதை தொடங்கி, மின்சிகரெட் புழக்கத்தை எதிர்கொள்வது வரையில் ‘சிஎல்ஏ’ எனப்படும் ‘நற்பண்பு, தலைமைத்துவக் கல்விக் கழகம்’ போன்ற அமைப்புகளுடன் இணைந்து இளையர்களுடன் இணைவதற்கான புதிய வழிகளைக் கண்டறிந்து வருவதாகக் குறிப்பிட்ட திரு டோங், திரைப்படம் வழியாகக் கதைசொல்வதும் அதில் ஒரு வழி என்றார்.

மின்சிகரெட் இல்லா எதிர்காலம் எனும் கருப்பொருளுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெருந்திரளானோர், 3.2 கிலோமீட்டர் தொலைவிற்கான சமூக நடைப்பயணத்தில் ‘ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா’ பாதை நெடுகிலும் பாடல் இசைத்தவாறே உற்சாகமாக வலம்வந்தனர்.

முன்னதாக, இந்த நிகழ்ச்சி குறித்துக் கருத்துரைத்த கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர்  தினேஷ் வாசு தாஸ், ‘‘மாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள், மாணவர்கள், பெற்றோர், மூத்தோர் ஒன்றாக நடைப்பயணத்தில் இணைந்துள்ளது, ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி முழுவதும் ஒற்றுமைக்கான ஆற்றல்வாய்ந்த அறிகுறியை வெளிப்படுத்துகிறது. தலைமுறைகளுக்கு இடையேயான நடைப்பயணம், சமூகத்தின் உண்மையான வலிமையைக் காட்டுகிறது,’’ என்றார்.

அதில் மின்சிகரெட்டின் தீங்கைப் பற்றிமட்டும் பேசவில்லை என்றும் இளையர்களின் வளமான எதிர்காலத்தையும் ஆரோக்கியத்தையும் நன்கு பாதுகாக்க ஒன்றிணைந்து உறுதியான நிலையை எடுப்பதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்