துடிப்புடன் தொடர்ந்து செயல்படும் உடற்குறையுள்ளோருக்கான எனேபலிங் வில்லேஜ்

2 mins read
f5c5464c-5230-4c6a-8a9c-678954ebecdc
எனேபலிங் வில்லேஜில் செயல்படும் பக்கவாத நோயாளிகளுக்கான பக்கவாத ஆதரவு நிலையம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ரெட்ஹில் வட்டாரத்தின் லெங்கோக் பாருவில் உள்ள உடற்குறை உள்ளோருக்கான ‘எனேபலிங் வில்லேஜ்’ தொடங்கி பத்து ஆண்டுகள் ஆன நிலையில், அங்கு ஆரோக்கியமான நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் மாதந்தோறும் வருவோரின் எண்ணிக்கை 12,000லிருந்து 22,000க்கு அதிகரித்துள்ளதாக அங்குள்ள சமூக அமைப்புகளில் ஒன்றான எஸ்ஜி உடற்குறையுள்ளோருக்கான வேலைவாய்ப்பு, வாழ்நாள் கற்றல் குழுவின் மூத்த இயக்குநர் எட்வர்ட் சூ தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டில் தேசிய அமைப்பான ‘எஸ்ஜி எனேபல்’ எனும் இயலாமை உள்ளோருக்கான நல்வாழ்வு நிலையம் அதனைத் தொடங்கியிருந்தது. அந்த இடம் நிரம்பி வழியும் அளவுக்குப் பலர் நம்பிக்கையோடு அங்கு வந்து செல்கின்றனர். எனேபலிங் வில்லேஜில் பல சமூக நிறுவனங்கள் பலவித சேவைகளை வழங்கி வருகின்றன.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்த ஏப்ரல் குவெக், ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் பூன் லேயில் உள்ள தனது வீட்டிலிருந்து 45 நிமிடப் பயணம் மேற்கொண்டு எஸ்ஜி வில்லேஜுக்கு வருகிறார். அங்கு மேசைப் பந்து, உட்கார்ந்து செய்யப்படும் தை சீ போன்ற உடல்நல நடவடிக்கைகளில் அவர் ஆர்வமுடன் ஈடுபடுகிறார்.

இது, எனது இரண்டாவது இல்லம் என்கிறார் அவர்.

“நான் பல நண்பர்களைச் சந்திக்கிறேன், எனக்கு உற்சாகமாக இருக்கிறது,” என்று எனேபலிங் வில்லேஜ் பற்றி அவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 கொள்ளைநோய்க்கு முன்பு மாதந்தோறும் அங்குள்ள சமூக அமைப்புகளுக்கு 26,000 பேர் வந்தனர். 2023 அக்டோபரில் அவ்வட்டாரத்தில் இருந்த ஃபேர்பிரைஸ் பேரங்காடி மூடப்பட்ட பிறகு அங்கு வருவோர் எண்ணிக்கை 2024ல் 12,000ஆகக் குறைந்தது.

‘எனேபலிங் வில்லேஜ்’ நீண்டநாள் செயல்படுவது குறித்துப் பேசிய ஏஆர்சி எனப்படும் தொடர்புத்திறன் குறைபாட்டுக்கான வளமை நிலையத்தின் நிர்வாக இயக்குநரான ஜேசலின் லிம், ஒரு சமூக நிறுவனத்துக்கு இரண்டு அம்சங்கள் முக்கியம் என்றார்.

நிதிச் செயல்பாடு, சமூகத்தின்மீதான தாக்கம் ஆகியவை அவை என்று அவர் குறிப்பிட்டார்.

ஏஆர்சி, எஸ்ஜி வில்லேஜில் கலை வகுப்புகளை நடத்துவதோடு தொடர்புத்திறன் குறைபாடு உள்ளவர்கள் தயாரித்த கைவினைப் பொருள்களையும் விற்கிறது.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏஆர்சி அங்கு இருந்த அதன் புரஃபசர் பிரவுன் கஃபேயை மூடிவிட்டு, 2024ஆம் ஆண்டின் இறுதியில் தெம்பனிசில் உள்ள தொடர்புத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான பாத்லைட் பள்ளி வளாகத்திற்கு மாற்றியது. இந்த கஃபே பாத்லைட் பள்ளியின் அங் மோ கியோ வளாகத்திலும் செயல்படுகிறது.

இதே எஸ்ஜி வில்லேஜில் நீண்டகாலமாகச் செயல்படும் மற்றோர் அமைப்பான பக்கவாத ஆதரவு நிலையம், அதன் வெற்றிகரமான செயல்பாட்டால் ஜூரோங் பாயின்டில் 2வது நிலையத்தைத் தொடங்கியுள்ளது.

2015ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பக்கவாத மீட்பு மற்றும் நல்வாழ்வுக்கான சமூக அடிப்படையிலான அந்த நிறுவனம், அதிகரித்து வரும் வாடிக்கையாளர் தேவையைப் பூர்த்தி செய்ய எனேபலிங் வில்லேஜில் மூன்று கிளைகளாக விரிவடைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்