சிங்கப்பூரில் நினைவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது பராமரிப்பாளர்களுக்கும் தொடக்கநிலை அந்திமகாலச் சேவை, இல்லப் பராமரிப்பு ஆதரவை வழங்கும் ‘பிடிஎஸ்பிளஸ்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நினைவிழப்பு நோய் அமைப்பும் லியன் அறநிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை உருவாக்கியுள்ளன. இதற்கு லியன் அறநிறுவனம் $3.3 மில்லியன் நன்கொடை வழங்கியுள்ளது.
தற்போது புக்கிட் பாத்தோக், ஜூரோங் பாயிண்ட், தெம்பனிஸ், தோ பாயோ ஆகிய இடங்களில் உள்ள சிங்கப்பூர் நினைவிழப்பு நோய் அமைப்பின் ‘நியூ ஹொரைசன்’ பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களில் இச்சேவை முன்னோடியாகச் செயல்படுத்தப்படுகிறது.
நினைவிழப்பு நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட தொடக்கக் கட்டத்தில் உதவ 2020ல் தொடங்கப்பட்ட பிடிஎஸ் திட்டத்தின் தொடர்ச்சியாக இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பிடிஎஸ்பிளஸ் திட்டம் நினைவிழப்பு நோயின் பிந்தைய கட்டத்தில் உள்ளவர்கள் மையப் பராமரிப்பிலிருந்து இல்லப் பராமரிப்புக்குச் சுமுகமாக மாற ஓராண்டு காலம் வரை உதவி வழங்குகிறது. 2024ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதி முதல் இதுவரை 64 குடும்பங்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளன.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 80க்கும் மேற்பட்ட முன்கள ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, 280க்கும் மேற்பட்ட நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் நேரடியாகப் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனநலக் கழகத்தின் ஆய்வின்படி, சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டில் நினைவிழப்பு நோயாளிகளின் எண்ணிக்கை 74,000 ஆக இருந்தது. இது, 2030ஆம் ஆண்டுக்குள் 152,000ஆக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நோயாளிகளின் முடிவெடுக்கும் திறன் குறையும் முன்பே, அவர்களின் பராமரிப்பு விருப்பங்களை ‘ஏசிபி கோ!’ என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கருவி மூலம் அறிந்துகொள்ள பிடிஎஸ்பிளஸ் உதவ இலக்கு கொண்டுள்ளது.
