கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்துவது தொடர்பில் போக்குவரத்துக் காவல்துறையின் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய 141 லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.
கனரக வாகனங்கள் சாலையில் செல்லும்போது பாதுகாப்பை முன்னிட்டு, அவற்றில் ஏற்றப்பட்டுள்ள சரக்குகளின் எடை, அதில் பயணம் செய்வோரின் எடை உட்பட, அந்த வாகனங்களுக்கான சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எடையை (Maximum Laden Weight - MLV) அதிகாரிகள் வரையறுப்பது வழக்கம்.
அந்த வகையில் 3,501 கிலோ முதல் 12,000 கிலோ வரையிலான அதிகபட்ச எடைக்கு அனுமதி பெற்ற வாகனங்கள் அனைத்திலும் அதிகபட்சமாக மணிக்கு 60 கிலோமீட்டர் என்ற வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்துவது கட்டாயம் என்று 2023ஆம் ஆண்டில் போக்குவரத்துக் காவல்துறை அறிவித்திருந்தது.
அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எடை, வாகனம் பதிவு செய்யப்பட்ட நாள் ஆகியவற்றின் அடிப்படையில் ஓட்டுநர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை இதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.
எடுத்துக்காட்டாக, 2018ஆம் ஆண்டுக்குமுன் பதிவு செய்யப்பட்ட, 5,001 கிலோ முதல் 12,000 கிலோ வரை ‘எம்எல்வி’ கொண்ட லாரிகள் இந்த மாதத்திற்குள் (ஜனவரி 2026) வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்துவது கட்டாயம். ஆனால், ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி, இந்தப் பிரிவைச் சேர்ந்த மொத்தம் 2,434 லாரிகளில் 141 லாரிகள் அக்கருவியைப் பொருத்தியிருக்கவில்லை என்று போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்தது. அதிகாரிகள் பலமுறை நினைவுபடுத்தியும் அந்த லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்படவில்லை என்று கூறப்பட்டது.
“இத்தகைய லாரிகளை அடையாளம் காண அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்படாத லாரிகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கப்போவதில்லை,” என்று போக்குவரத்துக் காவல்துறையின் சுற்றுக்காவல் பிரிவுக்கான துணை ஆணை அதிகாரியான உதவிக் கண்காணிப்பாளர் லீ ஜின் கூறினார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம், சாலை வாகனங்கள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் நிலப் போக்குவரத்து, மற்றும் அது தொடர்பான விவகாரங்கள் மசோதாவில் செய்யப்பட்ட திருத்தத்தின்கீழ், வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்தத் தவறிய குற்றம் முதல்முறையாக நிரூபிக்கப்பட்டால் அபராதத் தொகையை அதிகபட்சம் 10,000 வெள்ளியாக உள்துறை அமைச்சு உயர்த்தவிருக்கிறது. இரண்டாவது முறை இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20,0000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம்.
அடுத்த கட்டமாக, 2018ஆம் ஆண்டுக்குமுன் பதிவு செய்யப்பட்ட, 3,501 கிலோ முதல் 12,000 கிலோ வரையிலான அதிகபட்ச எடைக்கு அனுமதி பெற்ற லாரிகளில் இந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதிக்குமுன் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தும்படி உரிமையாளர்களை போக்குவரத்துக் காவல்துறை ஊக்குவிக்கிறது.

