போதைப்பொருள் புழக்கத்திற்காகக் கிட்டத்தட்ட பத்து முறை சிறைக்குச் சென்றவர் 56 வயது மேட் (உண்மைப் பெயரன்று).
இறுதியில், சிறைக்குச் சென்றது போதும் எனத் தீர்மானித்த மேட், எப்படியாவது தம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினார்.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் விநியோக மேலாண்மைப் பட்டயக்கல்வியை மேற்கொண்ட அவர், அடுத்த ஆண்டு மே மாதம் பட்டயச் சான்றிதழ் பெறவிருக்கிறார். தமது பட்டயக் கல்வி முடிவுற்றதை அடுத்து, ஒரு வேலையைத் தேடிக்கொள்வதை முன்னுரிமையாகக் கொண்டுள்ளார் மேட்.
மேட் போன்ற சிறைக்கைதிகளின் மறுவாழ்வுத் திட்டத்தை மேம்படுத்த பல முயற்சிகள் நடந்து வருகின்றன. சிங்கப்பூர்ச் சிறைத்துறை - மஞ்சள் நாடா இணைந்து ஏப்ரல் 15ஆம் தேதி நடத்திய வேலைத்திட்ட கருத்தரங்கு ஒன்றில் அம்முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அதன்படி, சிறைக்கைதிகள் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள தொழில் சார்ந்த பயிற்சியும் வேலை வாய்ப்புகளும் வழங்கப்படும். அத்துடன், தங்கள் தொழிலில் தொடர்ந்து நீண்ட காலம் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் அவர்களுக்கு ஆதரவு வழங்கப்படும்.
இந்த புதிய முயற்சிகள் ஏப்ரல் 2024ஆம் ஆண்டில் அறிமுகம் கண்ட ‘சீர்திருத்தக் கட்டமைப்பு 2030’ திட்டத்தின்கீழ் அடங்கும்.
‘முன்னேறும் சீர்திருத்தங்கள்: புதுமை, ஒத்துழைப்பு’ என்ற கருப்பொருளில் இடம்பெற்ற இந்தக் கருத்தரங்கில் கிட்டத்தட்ட 800 பேர் கலந்துகொண்டனர். உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
2015 முதல் 2019 வரை, சிறைக்கைதிகள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடும் போக்கு 5.1% குறைந்தது.
தொடர்புடைய செய்திகள்
மறுவாழ்வுக்கான அடிப்படை உதவி வழங்குவது மட்டுமல்லாது, கைதிகளுக்கு அளிக்கப்பட்ட ஒட்டுமொத்த ஆதரவினால்தான் இது சாத்தியமானது என்று திருவாட்டி டியோ குறிப்பிட்டார்.
“ஒரு கைதியைச் சமூகத்தில் ஒருங்கிணைக்க பலரின் உதவிக்கரங்கள் தேவைப்படுகின்றன,” என்றார் அவர்.
சிறைக்கைதிகளுக்குத் தக்க வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன் அவர்களின் செயல்திறனை மேம்படுத்த தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற முன்முயற்சிகளும் அறிமுகம் கண்டன.
அவ்வகையில், சிங்கப்பூர் சிறைத்துறை இவ்வாண்டு இறுதிக்குள் இரண்டு ஆளில்லாத் தொலைத்தொடர்பு நிலையங்களை அமைக்கவுள்ளது.
சிறைச்சாலைக்கு வெளியே அமைக்கப்படும் அந்தத் தொலைத்தொடர்பு நிலைய வசதி மூலம் கைதிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடலாம்.
‘நியூ ஹோப்’ சமூகச் சேவை அமைப்பிலும் காக்கி புக்கிட் சமூக நிலையத்திலும் அந்நிலையங்கள் அமைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.