வாட்ஸ்அப், டெலிகிராம், தளங்கள் வழியாக ஏற்படக்கூடிய மோசடி அபாயங்களை மேம்பட்ட ‘ஸ்கேம்ஷீல்டு’ செயலி, செயற்கை நுண்ணறிவு மூலம் இனம்காண முடிகிறது.
2020 நவம்பரில் முதன்முதலாக வெளியிடப்பட்ட இந்தச் செயலி, தொடக்கத்தில் அழைப்புகளுக்கும் குறுஞ்செய்திகளுக்கு மட்டுமே வேலை செய்தது.
இப்போது, டெலிகிராம் அல்லது வாட்ஸ்அப் வழியாகப் பெறப்படும் குறுஞ்செய்தியின் படத்தைச் செயலியில் பதிவேற்றம் செய்து அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதற்கான வாய்ப்புகளை பயனீட்டாளர்களுக்குத் தெரிவித்துவிடும்.
தேசிய குற்றத்தடுப்பு மன்றத்துடனும் காவல்துறையுடனும் இணைந்து ‘ஓப்பன் கவர்மண்ட் புரோடக்ஸ்’ உருவாக்கியுள்ள இந்தச் செயலி, 950,000 முறைக்கு மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
மோசடி குறுஞ்செய்திகளுக்கும் மோசடி அழைப்புகளுக்கும் பயன்படுத்தப்பட்ட 178,000 தொடர்புகளை இச்செயலி இதுவரை தடை செய்திருக்கிறது.
மேம்பாடு கண்டுள்ள இந்தச் செயலி, கூட்டுச்சேர்ப்பு வழியாக திரட்டப்படும் தரவுகளைப் பயன்படுத்தி மோசடிகளை நிறுத்த உதவுவதாக வர்த்தக விவகாரங்களுக்கான குற்றப்பிரிவு இயக்குநர் டேவிட் சியூ தெரிவித்தார்.
“மோசடிக்காரர்கள் தாங்கள் ஏமாற்ற விரும்புவோரைத் தொடர்புகொள்ளும் வாய்ப்புகள் இதனால் குறைகின்றன. மோசடிகளைக் குறைப்பது சமூக முயற்சி. எனவே, புதிய ‘ஸ்கேம்ஷீல்டு’ செயலியை இன்றே பதிவிறக்கம் செய்து, உங்களையும் பிற பயனீட்டாளர்களையும் மோசடிகளுக்கு எதிராக பாதுகாத்துக்கொள்ளுங்கள்,” என்று திரு சியூ கூறினார்.
மோசடிகளைத் தடுக்க சமூக ஊடக நிறுவனங்கள் முயற்சி
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப் ஆகிய தளங்களை உரிமைகொள்ளும் மெட்டா நிறுவனம், அதிக முயற்சிகளை எடுத்துள்ளதுபோல தோன்றுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
இந்த நிறுவனங்கள் கூடுதலாக பங்காற்றும்படி உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் பிப்ரவரியில் அழைப்பு விடுத்திருந்தார்.
ஃபேஸ்புக்கில் பொருள்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் தளமாக உள்ள ஃபேஸ்புக் மார்கெட்பிளேசில் அபாயத்தை விளைவிக்கும் விற்பனையாளர்களையும் ஃபேஸ்புக்கிலுள்ள விளம்பரதாரர்களையும் அடையாளம் காணும் சோதனைத் திட்டம், இவ்வாண்டு ஜூன் மாதத்தில் தொடங்கியது.
உள்துறை அமைச்சால் மதிப்பிடப்படும் இந்தத் திட்டம், முதன்முதலாக உலக அளவில் அறிமுகம் செய்யப்படும் திட்டம் எனக் கூறப்படுகிறது.
‘ஃபேஸ்புக் மார்கெட்பிளேஸ்’ தளத்தில் அறிமுகம் செய்யப்படும் நடவடிக்கைகளின் தாக்கத்தை ஜூன் 1க்கும் நவம்பர் 30க்கும் இடையிலும் ஃபேஸ்புக்கில் ஜூன் 1க்கும் டிசம்பர் 31க்கும் இடையிலும் உள்துறை அமைச்சு மதிப்பிடும்.
ஃபேஸ்புக்கில் புகார் செய்யப்பட்டுள்ள இணைய வர்த்தக மோசடிகள் கணிசமாகக் குறையாவிட்டால் உள்துறை அமைச்சு, ‘ஃபேஸ்புக் மார்கெட்பிளேஸ்’ தளத்திலுள்ள விற்பனையாளர்கள் அனைவரின் அடையாளத்தை அடுத்தாண்டு மார்ச் 1ஆம் தேதிக்குள் உறுதிசெய்யும்படி நிர்பந்தப்படுத்தும்.
அதேபோல, ஃபேஸ்புக்கில் இடம்பெறும் விளம்பரங்களுடன் தொடர்புடைய மோசடி எண்ணிக்கை கணிசமாகக் குறையாவிட்டால், ஃபேஸ்புக்கில் உள்ள விளம்பரதாரர்கள் அனைவரின் அடையாளத்தை அடுத்தாண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் உறுதிசெய்யும்படி உள்துறை அமைச்சு நிர்பந்தப்படுத்தும்.
இந்தச் சோதனைத் திட்டம் குறித்த மேல்விவரங்கள், ஆண்டிறுதிக்குள் அந்தத் திட்டம் நிறைவுறும்போது வெளியிடப்படும் என்று காவல்துறை தெரிவித்தது.