சிங்கப்பூருக்குள் ஜனவரி 9 முதல் ஜனவரி 22 வரை வரும் பயணிகள் மேம்பட்ட பாதுகாப்புச் சோதனைகளையும் தாமதத்தையும் எதிர்பார்க்கலாம் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
“இந்த வட்டாரத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 9 முதல் ஜனவரி 22 வரை நில, ஆகாய, கடல் சோதனைச் சாவடிகளில் ஆணையம் சிங்கப்பூருக்குள் வரும் பயணிகள், பெட்டிகள் (conveyances) மீது கூடுதல் பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொள்ளும்,” என்று ஆணையம் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தது.
சோதனைச்சாவடிகளில் ஏற்படக்கூடிய தாமதத்தினால் குடிநுழைவு அனுமதியைப் பெற கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறு பயணிகளுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனவரி 13 முதல் ஜனவரி 17 வரை ஆசியா, மத்தியக் கிழக்கு, ஐரோப்பா ஆகியவற்றுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று வெள்ளை மாளிகை ஜனவரி 7ஆம் தேதி கூறியிருந்தது.
திருவாட்டி ஹாரிஸ் ஜனவரி 15ஆம் தேதி சிங்கப்பூரில் இருக்கும்போது, சிங்கப்பூர் தலைவர்களைச் சந்திப்பார் என்றும் சாங்கி கடற்படைத் தளத்திற்குச் செல்வார் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.
இருப்பினும், கலிஃபோர்னியாவில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான காட்டுத் தீ காரணமாக, திருவாட்டி ஹாரிஸ் அவரது வெளிநாட்டுப் பயணத்தை ரத்துசெய்திருப்பதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை (ஜனவரி 9) அறிவித்தது.
அதற்கு ஒரு நாளுக்கு முன்னர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதே காரணத்தைக் குறிப்பிட்டு அவரது வெளிநாட்டுப் பயணத்தையும் ரத்துசெய்திருந்தார்.

