சுகாதார, அறிவியல் ஆணையம், மின்சிகரெட்டுகள் குறித்த புகார்களுக்கான தனது தொடர்பு முறைகளை ஜூலை 21 முதல் மேம்படுத்தும்.
சட்டவிரோத மின்சிகரெட்டு நடவடிக்கைகள் குறித்து புகார் அளிப்பதற்குப் புதிய தளம் ஒன்றும் அமைக்கப்படும் என்று அந்த அமைப்பு, ஜூலை 20ல் தெரிவித்தது.
புதிய இணையப் புகார் படிவமான www.go.gov.sg/reportvape , புகையிலை விதிமுறை கிளை எண் 6684 2036 அல்லது 6684 2037 ஆகியவை அவை.
மின்சிகரெட்டு தொடர்புடைய குற்றங்களைத் தெரிவிப்பதற்கான சேவை, தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும்.
முன்னதாக அது, வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5.30வரை இயங்கி வந்தது.
மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்தும் சந்தேக நபர்களின் தகவல்கள், மின்சிகரெட்டு விநியோகிப்பாளர் விவரங்கள், குற்றங்கள் நடந்ததாகச் சந்தேகிக்கப்படும் இடம், நேரம், தேதி ஆகியவை புகார்களுடன் சேர்க்கப்படுவது பயனுள்ளதாக இருக்கும்
கள்ள விளம்பரங்கள், இறக்குமதி, விநியோகம் ஆகியவை மின்சிகரெட்டுக் குற்றங்களில் அடங்கும்.
2024ல் பொதுமக்களிடமிருந்து மின்சிகரெட்டு தொடர்பாக 3,000க்கும் மேற்பட்ட புகார்களைப் பெற்றுள்ளதாக சுகாதார, அறிவியல் ஆணையம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
2025ன் முதல் பாதியில் அது, 2,500க்கும் மேற்பட்ட புகார்களைப் பெற்றிருந்தது.
மின்சிகரெட்டுகளை வாங்குவதும், வைத்திருப்பதும் விற்பதும் சிங்கப்பூரில் குற்றமாகும்.
குற்றவாளிகள் மீது 2,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படாலம்.
இணையத்திலும் வெளிநாடுகளிலும் மின்சிகரெட்டுகளை வாங்குவது சட்ட விரோதமாகும்.
குற்றவாளிகள் 2,000 வெள்ளி வரையிலான அபராதத்தை எதிர்நோக்குவர்.
மின்சிகரெட்டுகளை விற்பவர்கள், இறக்குமதி செய்பவர்கள், விநியோகம் செய்பவர்கள் ஆகியோருக்கு ஆறு மாதச் சிறைத்தண்டனை அல்லது 10,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.