புதிய தலைமுறை நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்கும் ஆற்றலைப் பெறும் வகையில் சிங்கப்பூர் குடியரசு கடற்படை தனது பயிற்சி நிலையத்தை மேம்படுத்தி உள்ளது.
‘இன்வின்சிபல்’ வகையைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் இங்கு இருந்தாலும் மேம்படுத்தப்பட்ட பயிற்சி நிலையம் ஐந்தாவது நீர்மூழ்கி என்று வருணிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.
சாங்கி கப்பல் தளத்தின் ஆர்எஸ்எஸ் சிங்கப்பூராவில் உள்ள அந்த நீர்மூழ்கிப் பயிற்சி நிலையத்தில் பல்வேறு பாவனைக் கருவிகள் (சிமுலேட்டர்) உள்ளன. அவை நவீன நீர்மூழ்கிக் கப்பலின் வடிவத்தில் அமைக்கப்பட்டு உள்ளன.
சிங்கப்பூர் குடியரசுக் கடற்படையில் நடைபெறும் ஒன்பது மாதப் பயிற்சியில் அந்தப் பாவனைக் கருவிகள் முக்கியப் பங்கை வகிக்கின்றன.
அந்தப் பயிற்சியை முடிப்பவர்கள் நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்கும் முழுமையான திறனைப் பெறுவர்.
தகுதிபெற்ற நீழ்மூழ்கிக் கப்பலோட்டியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் உண்மையான நீர்மூழ்கிக் கப்பல்களில் சிறிது நாள்கள் பயிற்சி எடுத்துக்கொள்வர்.
சிங்கப்பூர்க் குடியரசுக் கடற்படையின் முதல் இரண்டு ‘இன்வின்சிபல்’ (218எஸ்ஜி வகை) நீர்மூழ்கிக் கப்பல்கள் முழு ஆற்றலுடன் அதிகாரபூர்வமாக செயல்படத் தொடங்கியுள்ளன.
‘ஆர்எஸ்எஸ் இன்வின்சிபல்’, ‘ஆர்எஸ்எஸ் இம்பெக்கபல்’ ஆகிய அந்த இரு கப்பல்கள், பிரதமர் லாரன்ஸ் வோங்கின் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) ஆணைபெற்றன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் முதன்முறையாக இன்வின்சிபல் வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் அறிமுகம் செய்யப்பட்ட அந்த நிகழ்வில், அந்தக் கப்பல்களின் தோற்றத்தைக் கொண்ட பாவனைக் கருவிகளைப் பார்வையிடும் வாய்ப்பு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்குக் கிடைத்தது.
முழுமையான இயக்கத்தைப் பெற்ற நீர்மூழ்கிப் பயிற்றுநர் என்று அழைக்கப்படும் ஒரு பாவனைக் கருவியும் அங்கு இருந்தது.
புதிய இன்வின்சிபல் வகை நீர்மூழ்கிகளை இயக்குவதற்குத் தேவையான முக்குளிப்பு மற்றும் போர்த் தந்திர நடைமுறைகளிலும் பயிற்சி அளிக்கக்கூடியது அது.
எதிரிகளைப் பயமுறுத்தி, எச்சரிக்கையின்றித் தாக்கக்கூடிய வல்லமை, கடலுக்குள் ஆழத்தில் பதுங்கி இருங்கும் நேரத்தைப் பொறுத்து அமையும்.
புதிய இன்வின்சிபல் நீர்மூழ்கி, வழக்கமான நீர்மூழ்கிகளைக் காட்டிலும் கூடுதலாக 50 விழுக்காட்டு நேரம் கடல் ஆழத்தில் பதுங்கும் ஆற்றலைப் பெற்றிருக்கும்.

