மாறிய உலகில் சிங்கப்பூருக்கான இடத்தை உறுதிசெய்ய வேண்டும்: பிரதமர் வோங்

3 mins read
புதிய அமைச்சரவைப் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமது அரசாங்கத்தின் தலையாய முன்னுரிமையை எடுத்துரைத்தார்
36b864c2-06d0-4214-8ebb-8e5525f592d0
இஸ்தானாவில் புதிய அமைச்சரவைப் பதவியேற்புச் சடங்கில் பதவியேற்ற அமைச்சர்களுடன் பிரதமர் லாரன்ஸ் வோங் (முன்வரிசையில், இடமிருந்து 3வது). - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
multi-img1 of 5

மாறிய உலகில் சிங்கப்பூருக்கான இடத்தை உறுதிசெய்வதே புதிய அரசாங்கத்தின் தலையாய முன்னுரிமை என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

வல்லரசுகள் உத்திகளை மறுமதிப்பீடு செய்து, தங்கள் கை ஓங்கவேண்டும் என்பதற்காக நிலைப்பாட்டை மாற்றுவதால் போட்டி தீவிரமடைகிறது என்றும் கருத்து மோதலில் சிறிய நாடுகள் சிக்கிக்கொள்ளும் அல்லது உரையாடலிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுவிடும் அபாயம் உள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.

இஸ்தானாவில் வெள்ளிக்கிழமை (மே 23) நடைபெற்ற தமது புதிய அமைச்சரவையின் பதவியேற்புச் சடங்கில் பேசிய பிரதமர் வோங், “சிங்கப்பூர் மேற்செல்லாமல் அப்படியே நிற்காது. நாம் செயலற்று இருக்கலாகாது,” என்றார்.

“தெளிவான பார்வையுடனும் முனைப்புடனும் மாறும் சூழலுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும்,” என்றார் பிரதமர்.

முன்பிருந்ததைவிடக் கூடுதல் நிச்சயமற்றதாகவும் கணிக்க முடியாததாகாவும் விளங்கும் உலகில், ஒரு காலத்தில் வெற்றிக்கு அடித்தளமாக இருந்த நிலைமைகள் மாறுவதாகப் பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

“அமைதி, பாதுகாப்பு, தடையற்ற வர்த்தகத்திற்கு அடித்தளத்தை அமைத்த விதிகளின் அடிப்படையிலான அனைத்துலக ஒழுங்கு முறிந்து வருகிறது.

“பலதரப்பு ஒத்துழைப்பின் இடத்தை சிக்கலான இருதரப்பு, பரிவர்த்தனை ஒப்பந்தங்கள் பிடித்துக்கொள்கின்றன. அங்கு வலிமையானதே சரியானது என்ற நிலை நிலவுகிறது,” என்றார் திரு வோங்.

“நமது இலக்கு இந்த நிச்சயமற்ற உலகில் நாட்டை வழிநடத்துவது மட்டுமன்று. அதைச் சிறப்பாக வடிவமைக்க உதவுவதும்கூட. ஒத்த எண்ணம் கொண்ட பங்காளித்துவ நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதன்மூலம், கொள்கைகளையும் மதிப்புகளையும் நிலைநிறுத்துவதன் மூலம், சிறிய நாடுகளும் தங்களுக்கென ஓர் இடத்தைப் பெற முடியும்,” என்றார் அவர்.

இது பல முனைகளில் மேற்கொள்ளப்படும்.

வல்லரசுகளுடன், குறிப்பாக அமெரிக்காவுடனும் சீனாவுடனும் சிங்கப்பூரின் உறவுகளை அரசாங்கம் மேம்படுத்தும் என்றார் பிரதமர் வோங்.

“அவற்றுக்கு இடையிலான போட்டியில் சிக்கிக்கொள்ளாமல், இரு நாடுகளுக்குமே நண்பர்களாக இருப்போம். இரு நாடுகளுடனும் சீரான, கொள்கை அடிப்படையிலான முறையில் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் ஈடுபடுவோம்.

“எங்கு ஒத்துப்போகிறதோ அந்தத் தரப்புடன் இணைந்து செயல்படுவோம். ஒத்துப்போகாத அம்சங்களில் உறுதியாக நின்று சிங்கப்பூரின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் பாதுகாப்போம்,” என்று பிரதமர் வோங் கூறினார்.

‘சிங்கப்பூரர்களின் தீர்மானத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது’

அனைத்துலகச் சமூகமும் முதலீட்டாளர்களும் தேர்தல் முடிவுகளைக் கவனித்திருப்பார்கள் என்றார் பிரதமர்.

“தலைவர்களுக்குப் பின்னால் உறுதியாக நின்று, கணிக்க முடியாத உலகில் சிங்கப்பூர் தனக்கான இடத்தை உறுதிசெய்ய வலிமையான, பாதுகாப்பான அரசாங்கத்தின்மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஒன்றுபட்ட ஒரு நாட்டை அவர்கள் காண்பார்கள்.

“தேர்தல் முடிவு சந்தேகத்துக்கு இடமளிக்கவில்லை. சிங்கப்பூரர்களின் தீர்மானத்தையும் அவர்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தையும் உலகில் யாரும் கேள்வி கேட்க முடியாது.

“சிங்கப்பூருக்கு, குறிப்பாக நமது வெளியுறவுக் கொள்கையை நடத்துவதில் இது ஒரு தெளிவான சாதகமான நிலை,” என்று பிரதமர் வோங் விவரித்தார்.

ஒற்றுமை, ஒருமைப்பாடு முக்கியம்: அதிபர் தர்மன்

புதிய அமைச்சரவையின் பதவியேற்புச் சடங்கில் தொடக்கவுரை ஆற்றிய அதிபர் தர்மன் சண்முகரத்னம், சவால்களை எதிர்கொள்வதற்கான சிங்கப்பூரின் ஆகச் சிறந்த நம்பிக்கை ஒற்றுமையிலும் ஒருமைப்பாட்டிலும் உள்ளதாக கூறினார்.

இன, சமய வேறுபாடுகளைக் கடந்து சிங்கப்பூரர்கள் தொடர்ந்து ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மூப்படையும் மக்கள்தொகை, பிளவுபட்ட உலகப் பொருளியல் உள்ளிட்ட உலகளாவிய, உள்நாட்டுச் சவால்களை சிங்கப்பூர் எதிர்நோக்குகிறது. இவற்றுக்கு வருங்காலம் குறித்த கவனமான சிந்தனையும் துணிச்சலான செயல்பாடும் தேவைப்படும் என்று சொன்ன அதிபர் தர்மன், இவை அரசாங்கம் மட்டுமே எதிர்கொள்ள வேண்டியவை அல்ல, சிங்கப்பூரர்கள் அனைவரும் எதிர்கொள்ள வேண்டியவை என்றார்.

“ஒருவருடன் ஒருவர் பிணைக்கப்பட்ட நலனைக் கொண்ட மக்களாக நாம் தொடர வேண்டும். பின்தங்கியவர்களைக் கவனித்துக்கொள்ளும் மக்களாகவும் நாம் இருக்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, நடந்து முடிந்த தேர்தல் ஒரு ‘தலைமுறைக்கான முக்கியத்துவம் வாய்ந்த தருணம்’ என்று அதிபர் தர்மன் வர்ணித்தார்.

பிரதமர் வோங்கும் அவரது குழுவினரும் நாட்டை வழிநடத்த முதன்முறையாக சிங்கப்பூரர்களின் வலுவான ஆதரவை நாடினர். அந்த வகையில் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்தின் மீதான வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாக அதிபர் தர்மன் சொன்னார்.

இந்தத் தேர்தல், பிரதமர் வோங்கின் தலைமையிலான வலுவான, ஆற்றலுடைய அரசாங்கத்தைச் சிங்கப்பூருக்குத் தந்துள்ளதாக அதிபர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்