வருவாயைக் கூட்டவும் விலையைப் பொறுத்தவரை போட்டித்தன்மையை அதிகரிக்கவும் சிங்கப்பூரில் சென்ற ஆண்டு 11,700 நிறுவனங்களுக்கு என்டர்பிரைஸ்எஸ்ஜி அமைப்பு ஆதரவு வழங்கியிருக்கிறது.
சென்ற ஆண்டு உலக அளவில் வர்த்தகப் பூசல்கள் மோசமடைந்து, தொழில்நுட்ப இடையூறுகள் தலைதூக்கி, விநியோகச் சங்கிலிகள் மாறிவந்த சூழலில் இந்நிலை உருவானது.
புதன்கிழமை (ஜனவரி 28) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் என்டர்பிரைஸ்எஸ்ஜி இத்தகவல்களை வெளியிட்டது. இது, அமைப்பு ஆண்டுதோறும் நடத்திவரும் செய்தியாளர் கூட்டமாகும்.
சம்பந்தப்பட்ட வர்த்தகங்களில் 2,400 வர்த்தகங்கள் உருமாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டதாகவும் என்டர்பிரைஸ்எஸ்ஜி தெரிவித்தது. கொடுக்கும் விலைக்கு அதிகபட்சத் தரம் வழங்குவதற்கான (cost efficiency) நடவடிக்கைகளை மேம்படுத்துவது போன்றவை அவற்றில் அடங்கும்.
இத்திட்டங்களின் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வருவாய் 12.3 பில்லியன் வெள்ளி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு நிறுவனத்தின் வருவாயும் சராசரியாக 7.5 மில்லியன் வெள்ளி அதிகரிக்கும். திறனாளர்களுக்கான 10,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருவாய், வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரை முன்னதாக 2025ஆம் ஆண்டுக்கான எதிர்பார்ப்புகளைக் காட்டிலும் இம்முறை எதிர்பார்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளன. உலக அளவில் நிலவரம் அவ்வளவு நம்பிக்கை தரும் வகையில் இல்லாதது அதற்குக் காரணம் என்று என்டர்பிரைஸ்எஸ்ஜி தலைவர் லீ சுவான் டெக் தெரிவித்தார்.
சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், உலக நாடுகள் மீது வரி விதித்தார். அதனால், அந்தக் காலகட்டத்திலிருந்து பல வர்த்தகங்கள் பொறுத்திருந்து பார்த்து நிலைமையைக் கையாளும் அணுகுமுறையைப் பின்பற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
உருமாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்தும் வர்த்தகங்களும் அபாயங்களைத் தவிர்க்க வகைசெய்யும் அணுகுமுறைகளைப் பின்பற்றுவதாகவும் திரு லீ தெரிவித்தார். அவை, குறைந்த செலவில், மென்பொருள் சம்பந்தப்பட்ட சிறிய அளவிலான திட்டங்களிலிருந்து உருமாற்றுப் பணிகளைத் தொடங்குவதாக அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், பங்காளி நிறுவனங்கள், அமைப்புகள், உள்ளூர்க் கட்டமைப்புகள் ஆகியவற்றுடன் நேரடித் தொடர்பு ஏற்படுத்தித் தருவது போன்ற பணிகளில் என்டர்பிரைஸ்எஸ்ஜி வர்த்தகங்களுக்குக் கைகொடுத்துள்ளது.

