வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களைக் கொண்டாடும் வண்ணம் சிங்கப்பூரர் ஒருவர் அவர்களுக்கு இலவச முடிதிருத்தும் சேவையை வழங்கியுள்ளார்.
சிங்கப்பூரின் தேசிய தினத்தையொட்டியும் அவர் இந்நடவடிக்கையை மேற்கொண்டார். இணையப் பதிவாளரும் (கன்டென்ட் கிரியேட்டர்) தொழில் முனைவருமான 25 வயது முகம்மது நூர் டிஜானி நெஸாம், 59 வெளிநாட்டு ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை உட்லண்ட்சில் உள்ள ‘தக்லைஃப் ஸ்டுடியோ’ எனும் முடிதிருத்தும் கடைக்கு அழைத்துச் சென்றார். சிங்கப்பூரின் 59வது பிறந்தநாளைச் சித்திரிக்கும் வண்ணம் டொன்ஜேனி என்றழைக்கப்படும் முகம்மது நூர் டிஜானி நெஸாம், 59 வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவச முடிதிருத்தும் சேவையை வழங்கினார்.
முடிதிருத்தும் சேவைக்கான செலவை ‘தக்லைஃப் ஸ்டுடியோ’ ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது.
திரு டிஜானி இந்நடவடிக்கையை மேற்கொண்டது, சிங்கப்பூரின் தேசிய தினமான வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) அவர் டிக்டாக் தளத்தில் பதிவேற்றம் செய்த ஒரு காணொளியில் தெரிய வந்தது. அந்தக் காணொளியில் அவர் வெளிநாட்டு ஊழியர்களுடன் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தது தெரிந்தது.
அவர்கள் எத்தனை காலம் சிங்கப்பூரில் வசித்து வருகின்றனர், சொந்த நாடுகளில் இருக்கும் குடும்பத்தாருக்கு ஏதேனும் சொல்ல விரும்புகிறார்களா போன்றவை குறித்து திரு டிஜானி வெளிநாட்டு ஊழியர்களிடம் பேசினார்.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) இரவு 11 மணி நிலவரப்படி திரு டிஜானியின் காணொளி 93,000க்கும் மேற்பட்ட முறை காணப்பட்டது. அதற்கு 12,000க்கும் அதிகமான ‘லைக்’குகளும் கிடைத்தன.
தானும் தன்னுடன் சேர்ந்து தொழில் நடத்தும் ஹம்ஸா சலீம் என்பவரும் அல்-ஃபாஜர் எனும் அறநிறுவனத்தை நடத்துவதாக திரு டிஜானி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். அந்நிறுவனம், முஸ்லிம்களின் சார்பில் நன்கொடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
அந்த வகையில் என்றும் மறக்கமுடியாத மாறுபட்ட அனுபவத்தை வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கத் தாங்கள் விரும்பியதாக திரு டிஜானி சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“குறிப்பிட்ட ஒரு நிகழ்வை அவர்களின் மனங்களில் பதிக்க நாங்கள் எண்ணினோம். வெளிநாட்டு ஊழியர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்பிப் போகும்போது அவர்கள் சிங்கப்பூரில் நடந்த இந்நிகழ்வை நினைவில் வைத்திருக்கச் செய்ய நாங்கள் விரும்பினோம்,” என்றார் திரு டிஜானி.
டிக்டாக்கில் அவர்களின் காணொளிகளுக்குக் கருத்துகளைப் பதிவிட்ட சிங்கப்பூரர்களும் வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தங்களின் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.
இதேபோல் சென்ற ஆண்டு சிங்கப்பூரின் 58வது தேசிய தினத்தையொட்டி திரு டிஜானி, 58 வெள்ளி மதிப்பிலான உணவு, பானங்களை வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவசமாக வழங்கினார்.

