தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எல்லை தாண்டிய சட்டவிரோத டாக்சி சேவைகளைத் தடுக்க இஆர்பி 2.0 பயன்படலாம்

2 mins read
a1307df3-c591-496b-a984-b560e596b308
சட்டபூர்வமான எல்லை தாண்டிய டாக்சி சேவைகள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பயணிகளை ஏற்றி, இறக்க முடியும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் சட்டவிரோத எல்லை தாண்டிய டாக்சி சேவைகளை அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண முறை (இஆர்பி 2.0) மூலம் கட்டுப்படுத்தப்படுத்த வாய்ப்புள்ளது. அதன் சாத்தியம் குறித்து கடந்த வாரம் அதிகாரிகளுக்கும் தொழில்துறை சங்கங்களுக்கும் இடையே நடந்த சந்திப்பில் ஆராயப்பட்டது.

அக்கூட்டத்தில் இங்குள்ள ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை சட்டவிரோத டாக்சி சேவைகள் பறிக்காமல் இருப்பது உள்ளிட்ட விதிமுறைகள், இத்தகைய சேவைகளின் மேம்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

கடந்த 2023 முதல், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் இஆர்பி 2.0 முறையின் கீழ் அவற்றின் இடங்களை அறியக்கூடிய ‘ஓபியு’ உணர் கருவிகள் (on-board units) பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், சிங்கப்பூருக்குள் நுழையும் மலேசிய வாகனங்கள் தற்போது ஓபியு பொருத்தப்பட்ட நிலையில் இருக்க வேண்டிய அவசியமில்லை.

தேசிய டாக்சி சங்கம் (என்டிஏ), தேசிய தனியார் வாடகை வாகனச் சங்கம் (என்பிஎச்விஏ), சிங்கப்பூர்-ஜேபி டாக்சி சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், போக்குவரத்துக்கான மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் ஆகியோரும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தற்போதுள்ள எல்லை தாண்டிய டாக்சி சேவைகள் இளம் குழந்தைகள், மூத்தோர், வணிகப் பயணிகளைக் கொண்ட பெரிய குடும்பங்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்பதை கூட்டத்தில் பங்கேற்றவர்கள் எடுத்துரைத்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் அதன் ஃபேஸ்புக் பதிவில் செப்டம்பர் 2ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தது.

தற்போதைய எல்லை தாண்டிய டாக்சி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் உரிமம் பெற்ற 200 டாக்சிகள் வரை சிங்கப்பூர் - ஜோகூர் பாரு இடையே சேவை வழங்கலாம். இந்த டாக்சிகள் குறிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே பயணிகளை ஏற்றி - இறக்க முடியும்.

அதிகமான நிறுத்த இடங்கள், விரைந்த சேவை, அதிக டாக்சிகள், பெரிய திறன் கொண்ட வாகனங்களை அனுமதிப்பது உள்ளிட்ட சேவை விரிவாக்கம், செயலி வழி முன்பதிவு செய்ய தள நிறுவனங்களுடன் பங்காளித்துவத்தை ஏற்படுத்துவது போன்ற வழிகளில் தற்போதையை சேவையை மேம்படுத்த முடியும் என்று ஆணையம் கூறியது.

சட்டத்தை மீறும் வெளிநாட்டு வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அது உறுதியளித்தது.

எல்லை தாண்டிச் செயல்படும் சட்டவிரோத சேவைகள் நியாயமற்ற போட்டியை உருவாக்குவதுடன். பாதுகாப்பு ஆபத்துகளையும் ஏற்படுத்துவதாக என்பிஎச்விஏ, என்டிஏ ஆகியவை செப்டம்பர் 2 அன்று ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தன.

நியாயமான தரநிலைகள், பயண இடத்துக்கு ஏற்ப பயணிகளை இணைத்தல்,, பொதுப் போக்குவரத்து பாதையைப் பயன்படுத்த அனுமதி, சிங்கப்பூர்- மலேசியாவுக்கு நிலையான வாகன விதிமுறைகள் போன்றவற்றை தேசிய தனியார் வாடகை வாகனச் சங்கம் பரிந்துரைத்தது.

குறிப்புச் சொற்கள்