கடந்த அக்டோபர் மாதம் தமது விடுமுறை நாளில், 32 வயது மலேசியர் முகம்மது ஷம்சுல் நயீம், ஜோகூர் பாருவிலிருந்து அங் மோ கியோவில் உள்ள வாகனப் பட்டறை ஒன்றுக்குச் சென்று தமது மோட்டார்சைக்கிளில் புதிய ‘ஓபியு’ கருவியைப் பொருத்தியுள்ளார்.
அக்டோபர் நிலவரப்படி, ‘ஓபியு’ கருவி பொருத்தப்பட்ட 26,000 வெளிநாட்டுப் பதிவுபெற்ற வாகனங்களில் அவரது மோட்டார்சைக்கிளும் ஒன்று.
செப்டம்பர் மாத நடுப்பகுதியில் பதிவான 14,000 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் அது கிட்டத்தட்ட ஒரு மடங்கு அதிகமாகும்.
அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண முறையான ‘இஆர்பி 2’க்கு ஜனவரி 1ஆம் தேதி மாறுவதற்கு முன்னதாகவே, தங்கள் வாகனங்களில் ‘ஓபியு’ கருவியைப் பொருத்துவதற்கான உடனடித் தேவை இருப்பதை, சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் உணர்வதை இது காட்டுகிறது.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதிமுதல், சிங்கப்பூரில் உள்ள 121 அங்கீகரிக்கப்பட்ட பட்டறைகளில் வெளிநாட்டுப் பதிவுபெற்ற வாகனங்கள் ‘ஓபியு’ கருவிகளைப் பொருத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களைப் போலன்றி, வெளிநாட்டு வாகனங்களுக்கு அக்கருவி கட்டாயமானது அல்ல. வெளிநாட்டுப் பதிவுபெற்ற மோட்டார்சைக்கிள்களுக்கு ‘ஓபியு’ கருவியைப் பொருத்த பட்டறைகள் $262.25க்கு மேலான கட்டணத்தையும் கார்கள், வர்த்தக வாகனங்களுக்குக் குறைந்தபட்சம் $420.30 கட்டணத்தையும் வசூலிக்கின்றன.
அதே வேளையில், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் இலவசமாகப் பொருத்துவதற்கான காலக்கெடுவைத் தவறவிட்டால், அவை முறையே $35, $70 செலுத்த வேண்டியிருக்கும்.
