தீவு விரைவுச்சாலை, மத்திய விரைவுச்சாலைகளின் குறிப்பிட்ட பகுதிகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் இரு உச்சநேரங்களில் கூடுதலாக $1 மின்னியல் சாலைக் கட்டணம் (இஆர்பி) செலுத்த வேண்டும்.
2027ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் காலை 8.30 முதல் 9 மணி வரை தீவு விரைவுச்சாலையின் காலாங் பாரு, பெண்டிமியர் இணைப்புச் சாலையில் செல்வோருக்கான இஆர்பி கட்டணம் $4லிருந்து $5ஆக உயரும் என நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமை (நவம்பர் 16) தெரிவித்தது.
மேலும், அன்றிலிருந்து தீவு விரைவுச்சாலைக்குமுன் வடக்கு நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் மாலை 5 முதல் 5.30 மணி வரை செல்லும் வாகன ஓட்டுநர்களிடம் $1 இஆர்பி கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டது.
இவ்வாண்டு அக்டோபரில் விரைவுச்சாலைகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலே கட்டண உயர்வுக்குக் காரணம் என ஆணையம் கூறியது.
மேற்குறிப்பிட்ட அறிவிப்புகள் நடப்புக்கு வருவதற்கு முன்னதாக, நவம்பர் 23 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை 12 இடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு $1 இஆர்பி கட்டணக் கழிவு வழங்கப்படும்.
ஆயர் ராஜா விரைவுச்சாலையின் அலெக்சாண்டிரா, ஜூரோங் டவுன் ஹால் பகுதிகள், மத்திய விரைவுச்சாலையின் பிரேடல் சாலை, தீவு விரைவுச்சாலை, சிராங்கூன் சாலை இணைப்புகள், மரினா கோஸ்டல் விரைவுச்சாலையின் சென்ட்ரல் புலவார்ட், மரினா புலவார்ட் பகுதிகள், காலாங்-பாயா லேபார் விரைவுச்சாலையின் டெஃபு மேம்பாலப் பகுதி, தீவு விரைவுச்சாலையின் ஆடம் ரோடு, மவுண்ட் பிளசண்ட், காலாங் பாரு, யூனோஸ் லிங்க் ஆகிய இடங்கள் அவற்றில் அடங்கும்.
அவ்விடங்களில் அடுத்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் வழக்கமான கட்டணங்கள் மீண்டும் நடப்புக்கு வரும்; பிற இடங்களில் இஆர்பி கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.
பிரேடல் சாலை நுழைவாயிலுக்கு அருகிலுள்ள சிலேத்தார் விரைவுச்சாலை நோக்கிய மத்திய விரைவுச்சாலையிலும் ஏர்போர்ட் ரோடு நுழைவாயிலுக்கு அருகிலுள்ள மரினா கோஸ்டல் விரைவுச்சாலை நோக்கிய காலாங்-பாய லேபார் விரைவுச்சாலையிலும் நெரிசல் தொடர்ந்தால் 2027ஆம் ஆண்டில் புதிய கட்டணங்கள் விதிக்கப்படலாம் என ஆணையம் எச்சரித்தது.
