சிங்கப்பூரில் மூன்று இடங்களில் மின்னியல் சாலைக் கட்டணம் (இஆர்பி) ஒரு வெள்ளி அதிகரிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் ஒன்பதாம் தேதி முதல் அந்தக் கட்டண உயர்வு நடப்புக்கு வரும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 2) தெரிவித்தது. ஆணையம் கடந்த ஜூலை மாதம் சாலைப் போக்குவரத்து நிலவரத்தைப் பரிசீலித்த பிறகு இஆர்பி கட்டணத்தில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது.
விரைவுச்சாலைகளின் பல்வேறு பகுதிகளில் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது பரிசீலனையில் தெரிய வந்தது.
மத்தியப் பகுதியை நோக்கிய, ஜூரோங் டவுன் ஹாலுக்குப் பிறகு வரும் ஆயர் ராஜா விரைவுச்சாலைப் பகுதியில் காலை 7.30லிருந்து எட்டு மணி வரை வாகனமோட்டிகள் மூன்று வெள்ளி இஆர்பி கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். கிழக்கை நோக்கிய மரினா கடற்கரை விரைவுச்சாலையில் சென்ட்ரல் புலவார்ட் நுழைவாயிலுக்கு முன்பும் மரினா புலவார்டிலிருந்து வெளிவரும் இணைப்புச் சாலையிலும் மாலை 6.30லிருந்து ஏழு மணி வரை இஆர்பி கட்டணம் ஒரு வெள்ளியாகிறது.
ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயை நோக்கிய காலாங்-பயா லேபார் விரைவுச்சாலையில் டேஃபு மேம்பாலத்துக்குப் பிறகு வரும் பகுதியில் காலை எட்டிலிருந்து 8.30 மணி வரை இஆர்பி கட்டணம் நான்கு வெள்ளியாக இருக்கும்.

