பள்ளி விடுமுறைக் காலத்தை ஒட்டி, நவம்பர் 18 முதல் டிசம்பர் 31 வரை ஐந்து இடங்களில் மின்னியல் சாலைக் கட்டணம் (இஆர்பி) ஒரு வெள்ளி குறையும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
நகர்ப்பகுதியை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில், அலெக்சாண்ட்ரா சாலைக்கு முன்பாகவுள்ள நுழைவாயிலில் காலை 8.30 மணி முதல் 9 மணிவரை, வாகனவோட்டிகள் $1 செலுத்த வேண்டும். காலை 8 மணிமுதல் 8.30 மணிவரையிலும், 9 மணிமுதல் 9.30 மணிவரையிலும் அவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையிருக்காது.
அதே விரைவுச்சாலையில், ஜூரோங் டவுன் ஹாலுக்கு அடுத்துள்ள மூன்று நுழைவாயில்களில் வாகனவோட்டிகள் காலை 7.30 மணி முதல் 8 மணிவரை $2ம், காலை 8 மணி முதல் 8.30 மணிவரை $1ம் செலுத்த வேண்டும்.
தெற்கு நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் பிராடல் சாலைக்குமுன், காலை 7 மணிமுதல் 8 மணிவரை இஆர்பி கட்டணமாக $1 செலுத்த வேண்டியிருக்கும்.
தீவு விரைவுச்சாலையைப் பொறுத்தமட்டில், ஆடம் சாலை, மவுன்ட் பிளசன்டில் உள்ள இரு நுழைவாயில்களில், வாகனவோட்டிகள் காலை 7.30 மணிமுதல் 8 மணிவரை $1 செலுத்த வேண்டும்.
மேற்கு நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில், யூனோஸ் லிங்கிற்குமுன், காலை 7.30 மணியிலிருந்து 9.30 மணிவரை இஆர்பி கட்டணம் வசூலிக்கப்படாது.
பள்ளி விடுமுறை முடிந்தபின், அதாவது 2025 ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து அந்த ஐந்து இடங்களிலும் இஆர்பி கட்டணம் வழக்கநிலைக்குத் திரும்பும். மற்ற நுழைவாயில்களில் வசூலிக்கப்படும் இஆர்பி கட்டணங்களில் மாற்றமில்லை.

