பீஷான் சமூக மன்றம் மூத்தோருக்கான மின்விளையாட்டு நிலையம் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) அதிகாரபூர்வமாகத் திறந்துள்ளது.
55 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள நிலையத்தில் கணினி விளையாட்டுக்கான 10 கணினிகளும் ‘நின்டென்டோ சுவிட்ச்’ எனப்படும் ஐந்து நவீன கணினி விளையாட்டுச் சாதனங்களும் உள்ளன.
புதிய மின்விளையாட்டு நிலையத்தை பீஷான் - தோ பாயோ அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகர் எலிஸா சென் ஷியுன் திறந்துவைத்தார்.
விளையாட்டு, தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் ஒரே மாதிரியான சிந்தனையுடைய மூத்தோரிடையே துடிப்புடன் மூப்படைதலைப் பேணுவது இதன் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும்.
‘பீஷான் ஈஸ்ட் - சின் மிங் பியூட்டிஃபுல் பீப்பள்’ பணிக்குழுவும் சிங்கப்பூர் இணைய விளையாட்டுகள் சங்கமும் (SCOGA) இணைந்து இந்த நிலையத்தை அமைத்துள்ளன.
லியன் அறநிறுவனம், ‘ஏசர்’ (ACER), ‘ரேசர்’ (Razer) ஆகியவை இதற்குப் பெருந்தன்மையுடன் நிதியுதவி செய்ததாகக் கூறப்பட்டது.
திருவாட்டி சென் தமது தொடக்க உரையில், “இந்த நிலையம் விளையாட்டு இடம் என்பதற்கும் அப்பால் கற்றல், வளர்ச்சி, சமூகத் தொடர்பு ஆகியவற்றுக்கு வயது ஒரு தடை இல்லை என்ற நமது நம்பிக்கைக்குச் சான்றாக விளங்குகிறது,” என்று குறிப்பிட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் இந்த நிலையம் சோதனை அடிப்படையில் சேவைகளைத் தொடங்கியது. இதுவரை 100க்கும் அதிகமான மூத்தோர் அதில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதற்குக் கிடைத்த பேராதரவு, துடிப்புடன் விளங்குவதற்கும் சுறுசுறுப்புடன் இயங்குவதற்குமான புதிய வழிகளை ஏற்று, அதனைப் பின்பற்றச் சமூகம் தயாராக இருக்கிறது என்பதைக் காட்டுவதாகத் திருவாட்டி சென் கூறினார்.
மூத்தோருக்கு ஏதுவான வடிவமைப்புகள் இந்த நிலையத்தில் இடம்பெற்றுள்ளன. பெரிய எழுத்துகளைக் கொண்ட கணினி விசைப்பலகைகள், நிலையத்திற்குள் அனைத்து இடங்களிலும் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவதற்கான வசதி போன்றவை அவற்றில் சில.
பீஷான் - சின் மிங் வட்டாரக் குடியிருப்பாளர்களில் கிட்டத்தட்ட 25 விழுக்காட்டினர் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள். அவர்கள் இந்தப் புதிய மின்விளையாட்டு நிலையத்தின் மூலம் பலனடைவர் என்று கருதப்படுகிறது.
மேலும், இருவழித் தொடர்புடைய கணினி விளையாட்டுகளையும் உடற்பயிற்சியையும் இணைத்து ‘எக்சர்கேமிங்’ (Exergaming) எனும் பயிற்சி வகுப்புகளை மின்விளையாட்டுக் கல்விக்கழகம் இந்த நிலையத்தில் நடத்துகிறது.
உத்திபூர்வ சிந்தனைத் திறன், குழு மனப்பான்மை ஆகியவற்றை ஊக்குவிக்கும் ‘கவுன்டர்-ஸ்டிரைக் 2’ (Counter-Strike 2) பயிற்சியும் வழங்கப்படும் என்று ‘பீஷான் ஈஸ்ட் - சின் மிங் பியூட்டிஃபுல் பீப்பள்’ பணிக்குழுவின் தலைவர் ஸ்டீஃப் லோ கூறினார்.
இந்த முயற்சி, விளையாட்டின் வழியாகப் பல தலைமுறைகளை இணைக்கும் பாலமாக விளங்கி மேலும் ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் என்றார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை புதிய மின்விளையாட்டு நிலையத்திற்கு வந்திருந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான திருவாட்டி சிந்தியா, 63, இங்கு வழங்கப்படும் பல்வேறு கணினி விளையாட்டுச் சேவைகள் தம்மை உடல்ரீதியாகத் துடிப்புடன் வைத்துக்கொள்ள உதவுவதாகக் கூறினார். புதிய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் இது வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
மார்ச் மாதம் வரை மின்விளையாட்டு நிலையத்தைச் சோதனை அடிப்படையில் பயன்படுத்திப் பார்க்கலாம். அதன் பிறகு மூத்த குடிமக்கள், 12 முறை பயன்படுத்துவதற்கு $120 என்ற அடிப்படையில் கட்டணம் செலுத்தவேண்டும்.

