அபுதாபி: அபுதாபியிலிருந்து சிங்கப்பூருக்கு வருவதற்கான பயணச்சீட்டுகளை எட்டிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனம் வழங்கத் தொடங்கியுள்ளது.
மத்திய கிழக்கு வட்டாரத்தில் தொடரும் பூசலுக்கு மத்தியில் பல்வேறு விமானச் சேவைகள் தடைப்பட்டுள்ளன. இந்நிலையில், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே குறைவான சேவைகளை வழங்க எட்டிஹாட் முன்வந்துள்ளது.
பயணச்சீட்டுகளான தேவை உச்சத்தில் இருப்பதால் உடனடியாக அவற்றை வாங்கிக்கொள்ளும்படி அபுதாபியில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகம் அங்கிருக்கும் சிங்கப்பூரர்களை அறிவுறுத்தியது.
“அபுதாபியிலிருந்து புறப்பட விரும்புவோர் எட்டிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் இணையத்தளம் வழியாக உடனடியாக விமான இருக்கைகளை உறுதிசெய்ய அறிவுறுத்துகிறோம்,” என்று தூதரகம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
பயணச்சீட்டுகளை வாங்கிய பிறகு விமானம் நிச்சயமாகப் புறப்படும் என்பதை உறுதிசெய்தபின் விமான நிலையத்திற்குச் செல்லும்படி தூதரகம் அறிவுறுத்தியது.
மத்திய கிழக்கில் நிலவரம் தற்போது சரியில்லாததால் குறுகியக் காலத்துக்குள் விமானச் சேவைகள் ரத்தாகலாம், அடிக்கடி மாறலாம் என்ற தூதரகம், சிங்கப்பூரர்கள் அத்தகைய சூழலுக்குத் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தியது.
அபுதாபியிலிருந்து விமானத்தில் புறப்பட உதவி தேவைப்படுவதாக இதற்குமுன் விண்ணப்பம் செய்திருந்தோர், பயணச்சீட்டுகள் உறுதியானவுடன் தன்னிடம் அதுபற்றி தெரிவிக்கும்படி தூதரகம் சொன்னது.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளைச் சேர்ந்த மற்றோரு விமான நிறுவனமான எமிரேட்ஸ், துபாயிலிருந்து புதன்கிழமை (மார்ச் 4) சிங்கப்பூருக்குப் புறப்படவிருந்ததாக அதன் இணையத்தளத்தில் குறிப்பிட்டிருந்தது.
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணிகளைச் சொந்த நாடுகளுக்கு அனுப்பும் சேவையை எமிரேட்ஸ் வழங்கிவருகிறது.
“குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் விமானங்களில் பயணிகளை ஏற்றிச் செல்வதால் முன்கூட்டியே முன்பதிவு செய்தோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது,” என்று எமிரேட்ஸ் விமான நிறுவனம் குறிப்பிட்டது.
எமிரேட்ஸ் நிறுவனத்திடமிருந்து நேரடியாகத் தகவல் வந்தால் மட்டுமே பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்லும்படியும் அது அறிவுறுத்தியது.
மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கானோரைச் சொந்த நாட்டிற்கு அழைத்துச் செல்ல அரசாங்கங்களும் விமான நிறுவனங்களும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

