சிங்கப்பூரில் பிறந்து, வளர்ந்த 91 வயது திரு பாலசுப்பிரமணியம் நாட்டின் பல்வேறு கட்ட வளர்ச்சியை நேரில் பார்த்தவர். அவருடைய தாத்தா மாட்டுவண்டி ஒப்பந்ததாரர். தாயார் சிங்கப்பூரிலும் தந்தை இந்தியாவிலும் பிறந்தவர்கள்.
பொத்தோங் பாசிர் கம்பத்து வீட்டில் வளர்ந்த திரு பாலசுப்பிரமணியம், நாளடைவில் சிராங்கூன் ரோட்டுக்குக் குடிபெயர்ந்தார்.
நோரிஸ் சாலையில் அமைந்திருந்த ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் தமிழ்ப் பள்ளியில் பயின்றார். ரங்கூன் பள்ளியில் ஆங்கிலம் படித்தார்.
ஜப்பானிய ஆட்சியின்போது அவர் வீட்டைவிட்டு வெளியேறி இந்திய தேசிய ராணுவப் படையின் (INA) பாலர் சேனையில் சேர்ந்தார். போரில் அடிபட்டவர்களுக்கு மருத்துவ உதவி வழங்க அவர் அங்குக் கற்றுக்கொண்டார்.
“ஆனால் கற்றதைப் பயன்படுத்த வாய்ப்பு அமையவில்லை. அங்கேயே தங்க ராணுவப்படை இடம் கொடுத்தது. பெற்றோர் என்னை என் போக்கில் விட்டுவிட்டார்கள்,” என்றார் திரு பாலசுப்பிரமணியம்.
“நான் சுபாஷ் சந்திர போஸை நேரில் கண்டுள்ளேன். ஜான்ஸி ராணி படையினர் சிராங்கூன் ரோட்டில் அணிவகுத்து நடக்கும்போது பலரும் புகைப்படம் பிடிப்பார்கள்,” என்றார் திரு பாலசுப்பிரமணியம்.
பள்ளியில் ஜப்பானிய மொழியையும் கற்ற அவர், ஜப்பானிய வீரர்கள் தன்னை அழைத்து ஜப்பானிய மொழியில் பேசியதை நினைவுகூர்ந்தார்.
“பொதுவாகப் பள்ளி மாணவர்கள்தான் ஜப்பானிய மொழியில் பேசுவதால் அவர்கள் எங்களிடம்தான் பேசுவார்கள். எங்கள் பள்ளி பேட்ஜை (badge) அடையாளங்கண்டு அழைத்துப் பேசுவார்கள்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
ஜப்பானிய ஆட்சிக்காலம் முடிந்து ஆங்கிலேயர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மக்கள் மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றதை திரு பாலசுப்பிரமணியம் நினைவுகூர்ந்தார். “ஜப்பானியர் காலத்தில் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்,” என்றார் அவர்.
அதன்பின்னரும் சிங்கப்பூர் சீரான பாதையில் சென்றதாகக் கூறமுடியாது என்றார் அவர். ‘1950 மரியா ஹெர்ட்டோக் கலவரம், 1964 இனக் கலவரங்கள் எனக்கு இன்றும் நினைவில் உள்ளன. அப்போது ஆயுதம் ஏந்திச் சண்டையிட்டனர். மக்களைப் பாதுகாப்பாக ஒதுங்கும்படி எச்சரிக்கக் காவல்துறையினர் சங்கொலி எழுப்புவார்கள்,” என்றார் திரு பாலசுப்பிரமணியம்.
“திரு லீ குவான் யூ நாட்டைச் சிறப்பாக நிர்வகித்துச் சீர்படுத்தினார். அரசாங்கம் நேர்மையாக இருந்ததால் நாடு வளர்ச்சிகண்டது. வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் வீடுகளைக் கட்டத் தொடங்கியதும் நான் வாடகை வீட்டுக்குக் குடிபெயர்ந்தேன். நாளடைவில் சொந்த வீட்டையும் வாங்கினேன்,” என்றார் அவர்.
சிங்கப்பூரில் பிறந்ததால் அவருக்குச் சிங்கப்பூர்க் குடியுரிமைக் கிடைத்தது.
உயர்நிலைப்பள்ளி வரைதான் படித்திருந்தாலும் பணியிட வளர்ச்சியை அவரால் காணமுடிந்தது. முதலில் சிங்கப்பூரில் கார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய அவர் நிறுவனத்தின் மூலம் லண்டனில் பயிற்சி மேற்கொண்டார். பின்பு, கம்போடியாவில் முஸ்தஃபா நிறுவனர் முஹம்மது முஸ்தபா வைத்திருந்த கடையில் மேலாளராகப் பணிபுரிந்தார்.
எட்டு ஆண்டுகள் இந்தியத் திரைத்துறையில் உதவி இயக்குநர், இணை இயக்குநராகப் பணியாற்றினார் திரு பாலசுப்பிரமணியம். ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘அவன்தான் மனிதன்’ போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பங்களித்தார். ஜெயலலிதா, சிவாஜி கணேசன் போன்ற புகழ்பெற்ற நடிகர்களுடன் பணியாற்றினார்.
பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி எனப் பல நாடுகளையும் சுற்றிவந்துள்ள திரு பாலசுப்பிரமணியம், தன் ஓய்வுக்காலத்துக்கு நாடிய நாடு சிங்கப்பூர்தான்.
“இங்கு வாழ்வதற்கு எல்லா வசதிகளும் செய்துகொடுக்கிறார்கள். மருத்துவம் சிறப்பாக உள்ளது. முதியோர் மீது கவனம் செலுத்துகிறார்கள். அதனால்தான் இங்குத் திரும்பினேன்,” என்றார் திரு பாலசுப்பிரமணியம்.
“எதிர்காலத்தில் சிங்கப்பூர் தொடர்ந்து பல சிகரங்களை அடையும் என நம்புகிறேன். இளையர்களிடம் நிறைய பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார்கள்,” என்றார் அவர்.