டேட்டிங் செயலிகள் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் திருமணங்கள் குறித்த மனப்போக்கு மாறி வந்தாலும், சிங்கப்பூரில் சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதில் இன்றும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
இதற்கு முந்திய தலைமுறையினருடன் ஒப்பிடுகையில், பெற்றோரால் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டபோதிலும், அவை முற்றிலும் மறைந்துவிடவில்லை.
குறிப்பாக, இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே இந்த வழக்கம் இன்றும் நீடிக்கிறது. பிள்ளைகள் 20 வயதை எட்டியவுடன், அவர்களுக்கு ஏற்ற துணையைத் தேடும் பணியைப் பெற்றோர் தொடங்கிவிடுகின்றனர்.
அண்மையில் திருமணமான சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் தம்பதிகளில், 10ல் மூவர் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டவர்கள் என்று திருமணப் பதிவாளர்கள், சமூகத் தலைவர்கள், ஆலோசகர்கள் மதிப்பிடுகின்றனர். ஒரு தலைமுறைக்கு முன்பு இந்த விகிதம் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருந்தது.
பிள்ளைகளே தங்களுக்குப் பிடித்த துணையைத் தேடிக்கொள்வதைப் பெற்றோர் தற்போது ஏற்றுக்கொள்வதால், நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் விகிதம் குறைந்து வருவதாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், இந்திய முஸ்லிம் பெற்றோரில் பலர், தங்கள் பிள்ளைகளின் கலாசாரம், மொழி, சமயப் பின்னணியுடன் ஒத்துப்போகக்கூடிய ஒருவரையே வாழ்க்கைத்துணையாகத் தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர் என்று சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் தலைவர் ராஜா முஹம்மது தெரிவித்தார்.
இத்தகைய தேர்வுகள், தம்பதிகளுக்கு இடையிலான இணக்கத்தையும் கலாசார, பாரம்பரிய பண்புநலன்களின் தொடர்ச்சியையும் உறுதிசெய்வதாக அவர் கூறினார்.
குடும்பப் பின்னணி, சமூக அந்தஸ்து, சமயப்பற்று போன்ற காரணிகளின் அடிப்படையில் தங்களால் தங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த துணையைத் தேர்ந்தெடுக்க முடியும் என்று பெற்றோர் நம்புவதாக ‘ஸ்பார்க்ஸ் கவுன்சலிங்’ மையத்தின் நிறுவனர் ஹாஜா நவாஸ் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
குடும்பங்களுக்கு இடையே நிலவும் இருதரப்பு நம்பிக்கையும் அறிமுகமும் இத்தகைய திருமணங்களுக்கு முக்கியக் காரணங்களாக அமைவதாகப் ‘பிபிஐஎஸ்’ மலாய்/முஸ்லிம் அமைப்பின் மூத்த சமூக ஊழியர் நசீப் கமீஸ் குறிப்பிட்டார்.
ஆண்டுக்கு 100 முதல் 120 திருமணங்கள் வரை நடத்தி வைக்கும் உஸ்தாத் முகமது நஸிம் ரஹுமா துல்லா, தற்போது தாம் திருமணம் செய்துவைக்கும் தம்பதிகளில் 10 முதல் 15 விழுக்காட்டினர் மட்டுமே பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டவர்கள் என்றார்.
ஆனால், இந்தியாவிலிருந்து அண்மையில் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தவர்களிடையே இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது. அங்கு இன்றும் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களே வழக்கமாக உள்ளன.
சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த இந்திய முஸ்லிம்களில் 80 விழுக்காட்டினர் வரை இத்தகைய நிச்சயிக்கப்பட்ட திருமணங்களைச் செய்துகொண்டவர்கள் என நேர்காணலில் பங்கேற்றவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

