‘சிங்கப்பூரின் வெற்றியில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்கு அளிக்கப்படுகிறது’

‘சிங்கப்பூரின் வெற்றியில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்கு அளிக்கப்படுகிறது’

2 mins read
b5cd2592-9fb4-488a-86b2-2414967685f9
மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், அரசியல் செயலக உறுப்பினரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுவின் அரசியல், சட்ட விவகார ஆணையச் செயலாளருமான திரு சென் வென்ஸிங் (வலது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் வெற்றியில் ஒவ்வொரு சிங்கப்பூரரும் பங்களிக்கும் மூன்று முக்கிய அம்சங்கள் பன்முகக் கலாசாரம், முத்தரப்பு உறவு, வீட்டுரிமை ஆகியவை என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் கூறியுள்ளார்.

நான்காவது சிங்கப்பூர்-சீனா சமுதாய ஆளுமைக் கருத்தரங்கில் புதன்கிழமை (ஜூன் 19) பேசிய அவர், இதுவே சமுதாய ஆளுமைக்கான சிங்கப்பூரின் வழிகாட்டும் தத்துவம் என்றார்.

இந்த உயர்மட்டக் கருத்தரங்கு கடைசியாக 2016ல் நடைபெற்றது. மக்கள் பரிமாற்றங்களை கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பிருந்த நிலைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஒரு பகுதியாக, கருத்தரங்கை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்தன.

மூத்த அமைச்சர் டியோவும், அரசியல் செயலக உறுப்பினரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுவின் அரசியல், சட்ட விவகார ஆணையச் செயலாளருமான திரு சென் வென்ஸிங்கும் இந்த ஒருநாள் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினர்.

‘சமுதாய நல்லிணக்கத்துக்கான ஆளுமை’ எனும் கருப்பொருளில் ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற இக்கருத்தரங்கு, சமுதாய ஆளுமை குறித்த தங்களது அனுபவங்களைப் பகிர சிங்கப்பூர், சீன அதிகாரிகள் 90 பேருக்கு தளம் அமைத்துத் தந்தது.

தங்களது இனம் அல்லது சமயச் சார்பு பேதமின்றி, அனைத்து சிங்கப்பூரர்களும் சிங்கப்பூரில் சமமான பங்கைக் கொண்டுள்ளனர்.

“அனைவரும் சமமாக நடத்தப்படும் இந்தக் கோட்பாடு, அடிப்படையில் எங்களது ஆட்சி முறையை வடிவமைத்தது,” என்றார் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ.

ஊழியர்கள், முதலாளிகள், அரசாங்கத்துக்கு இடையேயான முத்தரப்புப் பங்காளித்துவம் மூலம் ஊழியர் உறவுகளில் சிங்கப்பூர் கடமை உணர்வை வளர்ப்பதாக அவர் சொன்னார்.

உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும் திறன் மேம்பாட்டிற்காகவும் முதலீடுகளுக்காகவும் நிறுவனங்களுக்கு ஊழியர்களுக்கும் நிதி வழங்குவது உட்பட பல்வேறு வழிகளில் முத்தரப்பு உறவுகளுக்கு அரசாங்கம் ஆதரவளிப்பதாக திரு டியோ கூறினார்.

முதலாளிகள் உடனான கருத்து வேறுபாடுகளைக் களைய ஊழியர்களுக்கும் சங்கங்களுக்கும் உதவ சிங்கப்பூரிடம் அமைப்புகள் உள்ளன.

குறிப்புச் சொற்கள்
அரசாங்கம்ஊழியர்டியோ சீ ஹியன்