ஒவ்வொரு பணியிட விபத்தும் தடுக்கக்கூடியதே: தினேஷ் வாசு தாஸ்

ஒவ்வொரு பணியிட விபத்தும் தடுக்கக்கூடியதே: தினேஷ் வாசு தாஸ்

2 mins read
0d73f78f-519f-4448-b684-053740144bcd
பாசிர் ரிஸ் கோஸ்ட் தொழிற்பூங்காவிற்கு பிப்ரவரி 10ஆம் தேதி சென்ற மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் (இடமிருந்து 2வது) பாதுகாப்பு விழிப்புணர்வு நிர்வாக அம்சம் குறித்து கேட்டறிந்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் என்பது ஒரு கூட்டு முயற்சி என்றும் பணியிடத்தில் நடக்கும் ஒவ்வொரு விபத்தும் தடுக்கக்கூடியதே என்றும் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) நடைபெற்ற விருது விழாவில் திரு தினேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

2025ஆம் ஆண்டில் பணியிட விபத்துகளால் ஏற்பட்ட இறப்புகளின் விகிதம் 100,000 பேருக்கு 0.96 என்ற அளவில் இருந்தது.

2024ஆம் ஆண்டில் அது 1.2 என்ற விகிதத்தில் இருந்ததைத் திரு தினேஷ் சுட்டிக்காட்டினார்.

“இறப்பே இல்லாமல் பணியிட விபத்து விகிதம் தொடர்ந்து ஒன்றுக்குக் கீழ் இருக்க வேண்டும்,” என்று திரு தினேஷ் வலியுறுத்தினார்.

மேலும், செவ்வாய்க்கிழமை காலை பாசிர் ரிஸ் வட்டாரத்தில் உள்ள ஒரு கட்டுமான தளத்திற்கு வருகை மேற்கொண்டதாகக் கூறிய திரு தினேஷ், பணியிடப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்தும் பேசினார்.

“நாம் அனைவரும் செயற்கை நுண்ணறிவை ஓர் அச்சுறுத்தலாகப் பார்க்காமல், பணியிடப் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

முதன்முறையாக நடைபெற்ற சிங்கப்பூர் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் விருது விழா, அதன் 60வது ஆண்டு பயணத்தையும் பறைச்சாற்றும் வண்ணம் அமைந்தது.

நிகழ்ச்சியில் பொறியாளர் ஹோ சியோங் ஹின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார். அவர் சிங்கப்பூரின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான முதல் ஆணையராக இருந்தவர்.

பணியிடப் பாதுகாப்பு நடைமுறைகளை சிறப்பாகக் கடைப்பிடித்த ‘வொர்லி’ பொறியியல் நிறுவனத்துக்கு பாதுகாப்புப் பாராட்டு விருது கிடைத்தது.

அத்துடன், மூன்று நன்கொடையாளர் விருதுகளும் வழங்கப்பட்டன.

சிறப்புத் தேவைகள் உள்ளவர்களுக்கான பள்ளி மாணவர்கள் சிறப்பு ஆடல் அங்கங்களைப் படைத்தனர்.

சமூகத் தொடர்பு மற்றும் விழிப்புணர்வுவழி தேசிய பாதுகாப்பு மன்றம் பணியிடப் பாதுகாப்பையும் ஊக்குவிக்கின்றது என்று மன்றத்தின் இயக்குநர்களில் ஒருவரான பார்த்திபன் நாயுடு, 61, கூறினார்.

அண்மைத் தீ விபத்துகள், தனிநபர் நடமாட்ட சாதனம் (பிஎம்டி) விபத்துகள், குறிப்பாக முதியவர்கள் தொடர்பான விபத்துகளைப் பற்றி தமிழ் முரசிடம் திரு பார்த்திபன் விவரித்தார்.

“பாதுகாப்பு என்பது சமூக அளவிலும் பொருந்தும். மக்கள் முன்வந்து எங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்