வேலையிடப் பாதுகாப்பு எச்சரிக்கைகள், வழிகாட்டுதல்கள், புதிய திட்டங்கள் ஆகியவை குறித்த தகவல்களை முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் நேரடியாக வழங்கும் நோக்கில் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றத்தின் புதிய வாட்ஸ்அப் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மரினா பே சேண்ட்சில் புதன்கிழமை (ஜூலை 23) நடைபெற்ற ஒன்பதாவது வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மாநாட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு புதிய பாதுகாப்பு முன்னெடுப்புகளில் இதுவும் ஒன்று.
மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், சிங்கப்பூரின் வேலையிடப் பாதுகாப்புச் சூழலை மேலும் பலப்படுத்தும் முக்கியத் திட்டங்களை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
நீண்டகாலப் பாதுகாப்பிற்கான புதிய கூட்டமைப்பு
வேலை செய்யும் காலம் முழுவதிலும் ஊழியர்கள் நலமாகவும் பாதுகாப்பாகவும் செயல்பட உதவும் வகையில், நீண்ட கால வேலைவாய்ப்புக்கான பாதுகாப்பு, உடல்நலச் செயற்கூட்டணி எனும் புதிய கூட்டமைப்பு குறித்து அமைச்சர் அறிவித்தார்.
முதலாளிகள், தொழிற்சங்கங்கள், நிபுணர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும் அக்கூட்டமைப்பு, வழுக்கி விழுதல் போன்ற சம்பவங்களையும் அவற்றினால் ஏற்படும் காயங்களையும் தடுத்தல், காயமடைந்த ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப உதவுதல், பணிச்சூழல் மறுவடிவமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
இக்கூட்டமைப்பில் இணைய விரும்பும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு 2026 ஆகஸ்ட் 31 வரை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
‘சேஜ்’ வழிகாட்டு தளம்
தொழில்நுட்ப முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் வேலையிடப் பாதுகாப்பு விதிகளையும் வழிமுறைகளையும் நிறுவனங்கள் எளிதாகப் புரிந்துகொள்ள பாதுகாப்பு ஆலோசனை, வழிகாட்டு தளம் (சேஜ்) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு வழிகாட்டு தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றமும் சிங்கப்பூர் வேலையிடப் பாதுகாப்பு அதிகாரிகள் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள இத்தளம், பாதுகாப்பு நிபுணர்களின் தொழில்முறை முடிவுகளுக்குத் துணைப்புரியும்.
2026 ஆகஸ்ட்டில் வெள்ளோட்டம் விடப்பட்டு, 2027 ஜனவரியில் முழுமையாக அறிமுகமாகவுள்ள அத்தளத்துடன், மேல்நிலை நிர்வாகிகளுக்கான மேம்படுத்தப்பட்ட வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.
சாலைப் பாதுகாப்பும் ஊழியர்களுக்கான முன்னெடுப்பும்
அதிகரித்துவரும் பணி சார்ந்த சாலை விபத்துகளைக் கருத்தில்கொண்டு, மனிதவள அமைச்சு, தொழிற்சங்க இயக்கம், தள நிறுவனங்கள் ஆகியவை இணைந்து ‘இணையவழி ஊழியர் பாதுகாப்பு பணிக்குழுவை’ அமைத்துள்ளன.
2026ஆம் ஆண்டின் முற்பாதியில் பதிவான பணி சார்ந்த சாலை விபத்துகளில் ஏழு பேர் உயிரிழந்தனர். அவர்களில் நால்வர் இணையவழி ஊழியர்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய துணையமைச்சர் தினேஷ், அத்தகைய விபத்துகளுக்கான ஆழமான காரணிகளைக் கண்டறிந்து அவர்களின் பாதுகாப்பை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வேலையிட விபத்துகளும் விழிப்புணர்வுக்கான முக்கியத்துவமும்
கடந்த மாதங்களில் பதிவான வேலையிட உயிரிழப்புகள் குறித்து திரு தினேஷ் கவலை தெரிவித்தார்.
“ஜூன் மாதத்தில் நடந்த வேலையிட மரணங்களின் அதிகரிப்பு, ஊழியர்களின் பாதுகாப்பிற்க்காக நாம் இன்னும் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன என்பதை நினைவூட்டுகிறது,” என்றார் அவர்.
இதைக் கருத்தில் கொண்டு, ஒவ்வோர் ஊழியரும் தனது பாதுகாப்பிற்கு முன்னுரிமைக் கொடுத்து, எந்தவொரு வேலையையும் தொடங்குமுன் ‘கவனி-யோசி-செய்’ (LOOK-THINK-DO) என்ற அணுகுமுறையைப் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
பணியைத் தொடங்குமுன் சற்று நிதானித்துச் சிந்திக்கும் அந்தச் சிறிய கால இடைவெளிதான், வாழ்விற்கும் சாவிற்கும் இடையிலான வித்தியாசத்தைத் தீர்மானிக்கிறது என்றும் துணையமைச்சர் தினேஷ் வலியுறுத்தினார்.

