கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் ஜூரோங் ஈஸ்ட், புவன விஸ்தா எம்ஆர்டி நிலையங்களுக்கு இடையே மாற்றப்பட்டுள்ள தண்ட[Ϟ]வாளப் பகுதிகளைச் சோதிக்கும் பணி ஒவ்வோர் இரவும் இடம்பெறுவதாக எஸ்எம்ஆர்டி மூத்த பொறியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) பேசிய திரு ஷஸ்னி ஜாஃபர், 33, பழுதுபார்ப்புப் பணிகளின் நிலைத்தன்மை குறித்து குழுவுக்கு நம்பிக்கை ஏற்படும் வரை, அவற்றை அடிக்கடி சோதிக்கும் பணிகள் தொடரும் என்றார். பாதிக்கப்பட்ட அந்த நான்கு நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை மாற்றும் பணியை மேற்பார்வையிட அவர் உதவினார்.
தண்டவாளத்தைச் சோதிக்கும் பணி பின்னர் வழக்கம்போல வார அடிப்படையில் தொடரும்.
சிங்கப்பூரின் எம்ஆர்டி கட்டமைப்பின் 37 ஆண்டுகால வரலாற்றிலேயே மிக மோசமான சேவைத் தடையில் ஒன்றாக, ஜூரோங் ஈஸ்ட்-புவன விஸ்தா நிலையங்களுக்கு இடையே ரயில் சேவை ஆறு நாள்கள் முடங்கியது.
பழுதுபார்ப்புப் பணிக்குப் பொறுப்பு வகித்த ரயில்வே பொறியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவுக்கு தண்டவாளம் சேதமுற்றிருந்தது.
“தண்டவாளம் இந்த அளவுக்கு உடைந்ததை நான் பார்த்ததே இல்லை,” என்றார் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தண்டவாளப் பணிக்கான துணை இயக்குநர் ஸைலானி முகம்மது இத்ரிஸ், 60.
இத்துறையில் 25 ஆண்டுகாலம் அனுபவம் உடைய அவர், தண்டவாளம் உடைந்த விதம் வழக்கத்திற்கு மாறானது என்றார்.
செப்டம்பர் 25 முதல் 30ஆம் தேதி வரை பழுதுபார்ப்புகளை மேற்கொள்ள பணியில் ஈடுபடுத்தப்பட்ட 800க்கும் அதிகமான ஊழியர்களில் திரு ஷஸ்னியும் திரு ஸைலானியும் அடங்குவர்.
தொடர்புடைய செய்திகள்
அந்த ஆறு நாள் சேவைத் தடையின்போது, எஸ்எம்ஆர்டி அதன் ஒட்டுமொத்த தண்ட[Ϟ]வாளப் பராமரிப்பு ஊழியரணி உட்பட ஏறக்குறைய 500 ஊழியர்[Ϟ]களைப் பணியில் ஈடுபடுத்தியது. ஒவ்வொரு வேலை நேரமும் 12 மணி நேரம் என இரு வேலை நேரங்களில் அவர்கள் பணியாற்றினர்.
இதற்கிடையே, தண்டவாளம் சம்பந்தப்பட்ட இதர திட்டங்[Ϟ]களில் ஈடுபட்ட வெளிப்புற ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 300 ஊழியர்களை நிலப் போக்கு[Ϟ]வரத்து ஆணையம் பணியில் ஈடு[Ϟ]படுத்தியது. ஒவ்வொரு வேலை நேரமும் எட்டு முதல் 10 மணி நேரம் என மூன்று வேலை நேரங்களில் அவர்கள் பணியாற்றினர்.
அந்த 800 ஊழியர்கள் போக, நிலப் போக்குவரத்து ஆணையம், எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட், டவர் டிரான்சிட் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த 620 தரைத்தள ஊழியர்களும் காவல்துறை அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். செப்டம்பர் 26, 27ஆம் தேதி[Ϟ]களில் காலை உச்ச நேரத்தில் கூட்டத்தைச் சமாளிக்க அவர்கள் உதவினர்.