எட்டு மாத காலமாக சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பங்கு விலைகள் ஏறி, இறங்கும்படியான நடவடிக்கையில் ஈடுபட்டு பங்கு விலைகள் செயற்கையாக ஏறக் காரணமாகி அதன்மூலம் லாபம் சம்பாதித்தார் ஒருவர்.
பங்குகளை வாங்க முற்படும் நடவடிக்கையில் ஈடுபடுவது, பின்னர் சில விநாடிகளிலேயே அதை ரத்து செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு பங்கு விலைகளை செயற்கையாக ஏற வைத்தார் ஓ வீ ஹியன் என்ற ஆடவர்.
இதுபோல் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட்டுக்கும் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் ஓ, 215 தடவை செயல்பட்டார். இதன்மூலம் சட்டவிரோதமாக அவர் $255,385 லாபம் ஈட்டினார்.
அக்டோபர் 28ஆம் தேதி, 46 வயது ஓவுக்கு மாவட்ட நீதிபதி கிறிஸ்டஃபர் கோ எங் சியாங் ஒன்பது மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதுவே பங்குச் சந்தையில் செயற்கையாக பங்கு விலைகளை ஏற வைத்த ஆகப் பெரிய மோசடி என்று கூறப்படுகிறது.
ஓ 2005ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டுவரை யூஓபி கே ஹியன், கிரெடிட் சுவிஸ் செக்கியூரிட்டிஸ், சிட்டி குருப் குளோபல் மார்க்கெட்ஸ் ஆகிய பங்குகள் வாங்கி விற்கும் நிறுவனங்களில் பங்குகளை வாங்குவது, பின்னர் விற்பது தொடர்பான திறன்களை வளர்த்துக்கொண்டதாக அறியப்படுகிறது.