தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

25 பேரை ஏமாற்றி $1.3 மில்லியன் சுருட்டிய முன்னாள் நிதி ஆலோசகர்

2 mins read
178c5b2a-0b9c-4bd8-804e-42519ad9cda5
படம்: - பிக்சாபே

பொய்யான முதலீட்டு வாய்ப்புகளுடன் 25 பேரை ஏமாற்றி, மொத்தம் $1,275,500 அபகரித்த குற்றத்தை முன்னாள் நிதி ஆலோசகர் ஓங் கா யொங் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

முப்பத்தாறு வயதாகும் ஓங், 2020 ஏப்ரலிலிருந்து ஓராண்டுக்கு மேலாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தார்.

தன் நண்பர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரை நம்பிக்கை மோசடி செய்ததால் சரணடைய விரும்புவதாகக் கூறி, 2020 அக்டோபர் 20ஆம் தேதி அவரே காவல்துறையை அணுகினார்.

‘மெனுலைஃப் நிதி ஆலோசகர்கள், பியாண்ட் ஆலோசனை’ நிறுவனத்தில் முன்பு வேலை செய்த ஓங், புதன்கிழமை நீதிமன்றத்தில் 11 ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

அவர்மீதான மேலும் 14 குற்றச்சாட்டுகள் தீர்ப்பளிக்கும்போது கவனத்தில் கொள்ளப்படும்.

ஏடன் ஓங் என்றும் அறியப்பட்ட அவர், 2020 ஆகஸ்ட் மாதம் தன் வாடிக்கையாளர்களில் ஒருவரை அணுகி, ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ஒரு முதலீட்டுத் திட்டம் இருப்பதாகக் கூறினார்.

தனது ஊழியர் குறியீட்டைப் பயன்படுத்தி அத்திட்டத்தை அந்த மாதுக்கு வழங்க அவர் முன்வந்தார்.

இத்திட்டத்தில் $5,000 முதலீடு செய்தால், ஆறு மாதத்திற்கு மாதந்தோறும் $187.50 லாப ஈவு கிடைக்கும் என்றும் முதலீட்டிற்கு உத்தரவாதம் உண்டு என்றும் அவர் கூறினார்.

இதை நம்பிய மாது, ஓங்கின் வங்கி கணக்குக்கு $5,000 அனுப்பினார். ஆறு மாதத்திற்குப் பிறகு $1,125 லாப ஈவும் பெற்றார்.

ஆனால், மூன்றாவது முறையாக மாது முதலீடு செய்தபோது, முதலீடு, லாப ஈவு இரண்டுமே கிடைக்கவில்லை.

இதே முறையில் மற்றவர்களையும் ஓங் ஏமாற்றினார். இதுவரை அவர் $267,856 மட்டுமே திருப்பிக் கொடுத்திருக்கிறார். மீதி $1,007,644 திருப்பித் தரப்படவில்லை.

ஓங்கிற்கான தண்டனை விவரம் செப்டம்பர் 5ஆம் தேதி அறிவிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்