குளியல் வளாகத்தில் ரகசியக் காணொளி: நீதிமன்றத்தில் முன்னிலையாக முன்னாள் சிங்கப்பூர் தூதரகப் பணியாளருக்கு ஆணை

குளியல் வளாகத்தில் ரகசியக் காணொளி: நீதிமன்றத்தில் முன்னிலையாக முன்னாள் சிங்கப்பூர் தூதரகப் பணியாளருக்கு ஆணை

2 mins read
132cb46b-c25d-4a88-8aa1-c09bc8ffbf99
தோக்கியோவின் சிங்கப்பூர் தூதரகத்தில் ஆலோசகராகப் பணிபுரிந்த 55 வயது ஆடவர், வெளியுறவுச் சேவையை விட்டு விலகிவிட்டதாக அறியப்படுகிறது. - படம்: சிங்கப்பூர் தூதரகம் தோக்கியோ/ஃபேஸ்புக்

ஜப்பானிலுள்ள சிங்கப்பூர் தூதரகத்தைச் சேர்ந்த ஆலோசகர் ஒருவர், தோக்கியோவில் அமைந்துள்ள பொதுக் குளியல் வளாகத்தில் ஒரு சிறுவனை ரகசியமாகக் காணொளி எடுத்ததை ஒப்புக்கொண்டார்.

பாலியல் ரீதியாக மற்றவர்களின் உடல் அங்கங்களை மறைந்திருந்து பார்த்த வேறு பல சம்பவங்களிலும் தான் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட அந்த 55 வயது ஆடவர், ஜப்பானிய நீதிமன்றத்தில் முன்னிலையாக ஆணையிடப்பட்டுள்ளதாக மே 2ஆம் தேதி ஜப்பானிய செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.

பெயர் விவரங்கள் இன்னும் வெளியிடப்படாத அந்த ஆடவர், வெளியுறவுச் சேவையிலிருந்து விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அனுபவமிக்க வெளியுறவுச் சேவை அதிகாரிகளுக்கான தூதரகப் பதவி வகித்தவர் அந்த ஆடவர்.

பொதுக் குளியல் வசதியில் ஆண்கள் உடைமாற்றும் அறையில் பிப்ரவரி 27ஆம் தேதி ஆடைகளின்றி இருந்த பதின்ம வயது சிறுவன் ஒருவரைத் தன் திறன்பேசியைக் கொண்டு காணொளி எடுத்தபோது ஆடவர் பிடிபட்டதாக ஜப்பானின் ‘அசாஹி ஷிம்புன்’ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

தோக்கியோவின் மினாட்டோ பகுதியில் அமைந்துள்ள குளியல் வசதியில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். இதே மினாட்டோ பகுதியில் சிங்கப்பூர் தூதரகமும் அமைந்துள்ளது.

ஆடவரின் கைப்பேசியில் ஆடைகளின்றி இருந்த சிறுவனைக் காட்டும் காணொளியும் அதே உடைமாற்றும் அறையில் வேறு பல ஆண்களைக் காட்டும் காணொளிகளும் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளின் கைகளில் சிக்கின.

மற்ற பொதுக் குளியல் வளாகங்களிலும் தான் இதுபோன்ற ரகசியப் படங்கள் எடுத்துள்ளதாக ஆடவர் ஒப்புக்கொண்டார். ஆறுமாத காலத்தில் குறைந்தது 700 படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிறுவர் ஆபாசப் படங்கள் தொடர்பான சட்டங்களை மீறியதற்காக ஆடவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்துவதைக் காவல்துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்